கவர்ச்சி என்பது உடல் தோற்றம் மற்றும் உடையை மட்டும் சார்ந்தது அல்ல. உங்களை நீங்கள் மற்றவர்களிடம் எப்படி சித்தரிக்கிறீர்கள், நேர்மறையாக அவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்பதை பொறுத்தது. ஆளுமை, நம்பிக்கை, மகிழ்ச்சியாக இருப்பது ஆகியவை, ஒருவர் மீது மக்களை ஈர்ப்பு கொள்ளச் செய்யும் முக்கியமான விஷயங்கள்.
இந்த விஷயங்களை பெற்றிருக்கும் ஒருவரை மக்கள் அதிகம் விரும்புகின்றனர். ஒருவர் எவ்வளவு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தன்னிடம் இருந்து மற்றவர்களுக்கு கொடுக்கிறார் என்பதை பொறுத்தே, அவர் மீது பிரியம் கொண்டவர்களின் எண்ணிக்கை இருக்கும். அந்தவகையில், நீங்களும் மற்றவர்கள் விரும்பும் கவர்ச்சிகரமானவராக இருக்க முடியும். அதற்கு சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
1. உடல்மொழி : உடல்மொழியை வைத்தே நம்முடைய குணாதிசயங்களை மற்றவர்கள் யூகித்துவிடுவார்கள். எந்தவொரு இடத்திலும் தயக்கத்துடன், ரிலாக்ஷாக இல்லாமல் இருந்தால் அவர்களிடம் பேசுவதற்கு மற்றவர்கள் தயங்குவார்கள். அதற்கு மாறாக இறுக்கமாக முகத்தை வைக்காமல், சிரித்த முகத்துடன், தோள்களை ரிலாக்ஷாக வைத்துக்கொண்டு, புருவங்கள் ஷார்ப்பாக வைத்திருந்தீர்கள் என்றால் மற்றவர்களின் கவனம் நேர்மறையாக உங்கள் மீது விழும். தலையை சாய்த்து வைத்திருந்தால்கூட விளையாட்டுத்தனமானவர் என எண்ணிக்கொள்வார்கள்.
2. பர்ஸ் அல்லது கண்ணாடி : பொதுவாக பெண்கள் ஒருவரிடம் பேசுவதற்கு தயக்கம் காட்டினால் அல்லது பேசுவதை தவிர்க்க விரும்பினால் தங்கள் கைகளில் இருக்கும் பர்ஸ்ஸை (கைப் பை) இறுக்கமாக பிடித்துக்கொள்வார்கள். ஆண்கள் ஒருவரிடம் பேசுவதை தவிர்க்க வேண்டும் என விரும்பினால் கண்ணாடி மார்பகத்துக்கு நேராக ஷர்ட்டில் மாட்டிக்கொள்வார்கள். நீங்கள் பேச விரும்பும் ஒருவருடன் தெரியாமல் இந்த அணுகுமுறையை கடைபிடித்தீர்கள் என்றால், அதனை தவிர்க்கலாம். கண்ணாடியை ஒதுக்கிவிட்டு, பர்ஸ் இறுக்கமாக பிடிப்பதை தவிர்க்கும்போது, பேசுவதற்கு தயாராக இருக்கிறோம் என்ற சிக்னலை கொடுக்கலாம்.
3. சிவப்பு நிற உடை : சிவப்பு நிறம் அன்பையும், உணர்ச்சியையும் வெளிப்படுத்தன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அதனால், உங்களுக்கு பிடித்தமான விருந்து அல்லது நல்ல நிகழ்ச்சிகளில் சிவப்பு நிற உடைகளை அணிவதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் மீதான பார்வையும் அதிகரிக்கும். நேர்மறையான எண்ணத்தோடு உங்களுடன் பேசுவதற்கு பலர் தயாராக இருப்பார்கள்.
4. நேராக உட்கார்வது : ஒருவருடன் உரையாடும்போது நேராக அமர்ந்து உரையாடினீர்கள் என்றால், உங்களின் தோரணை நம்பிக்கையையும், அதிகாரத்தையும் வெளிப்படுத்துவதாக இருக்கும். இது மற்றவர்களை ஈர்க்கும். அதனைவிடுத்து சாய்வாக அமர்ந்து கொண்டு அல்லது நிற்கும்போது டான்ஸ் ஆடிக்கொண்டு பேசுவது, உங்கள் மீதான ஈர்ப்பைக் குறைக்கும்.
5. நகைச்சுவை உணர்வு : நல்ல நகைச்சுவை உணர்வு இருப்பது மிகவும் கவர்ச்சிகரமான அம்சம். எல்லோரையும் சிரிக்க வைக்கவும், நீங்கள் கூறுவதை பிறர் உள்வாங்கவும் நகைச்சுவை உணர்வு கைகொடுக்கும். உங்களோடு இருக்கும்போது நேரத்தை செலவிடுவது என்பதே பிறருக்கு தெரியாது. சலிப்பான உணர்வு ஒருபோதும் எழாது என்பதால், நேரத்தை கூடுமானவரை உங்களுடன் இருந்து செலவிட வேண்டும் என விரும்புவார்கள். எளிதில் மற்றவர்கள் உங்களை அணுகுவதற்கும், பாசமாகவும், திறந்த மனதுடன் பேசுவதற்கும் நகைச்சுவை உணர்வு உதவியாக இருக்கும்.
6. இயல்பாக பேசுங்கள் : பிறரின் கவனத்தை ஈர்க்க, நீங்கள் கடினமானவராக, எளிதில் அணுக முடியாதவராக இருக்குமாறு பிறர் அறிவுரைக் கூறலாம். ஆனால், இது நெகடிவ் இம்பாக்டையே ஏற்படுத்தும். இயல்பாகவும், பிறரை மகிழ்ச்சிப்படுத்துபவராகவும் இருந்து பழகுங்கள். கடினமான வார்த்தைகளை பிரயோகிக்காமல், நல்ல விதமாக பேசும் வார்த்தைகளை பயன்படுத்துங்கள்.