திருமணம் என்பது வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். நிறைய எதிர்பார்ப்புகளுடன் உறவில் இணையும் தம்பதிகளுக்கு சில விஷயங்களை சரியாகக் கையாள முடியாமல் திணறுவார்கள். தேனிலவு காலம் என்று கூறப்படும் திருமணம் முடிந்த சில நாட்கள் அல்லது வாரங்கள் மகிழ்ச்சியாக கடந்தாலும், அதன் பின் முரண்பாடுகள், கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் என்று பல்வேறு சிக்கல்கள் எழலாம். பெரும்பாலான தம்பதிகளுக்கு திருமணம் ஆன முதல் ஆண்டு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
திருமணம் முடிந்தபின் ஏற்படும் கவலை மற்றும் வெற்றிடம் : திருமணம் என்பது பெரும்பாலனவர்கள் கோலாகலமாகக் கொண்டாடும் மிகவும் ஸ்பெஷலான, மிகவும் முக்கியமான தருணமாகத் தான் இருக்கிறது. என் திருமணம் இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்று எல்லாவற்றையும், தேனிலவு முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுவார்கள். இந்நிலையில், திருமணம் முடிந்த ஒரு சில வாரங்களுக்குப் பின்னர், ஒரு விதமான வெற்றிடம் ஏற்படும். திருமணத்துக்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே பரபரப்பாக திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்து, பின்னர் அமைதியாக மாறும் போது, எப்படி அடுத்த கட்டத்துக்குச் செல்வது என்பது கேள்விக்குறியாக மாறும்!
கூடுதல் பொறுப்புகள் : திருமணம் செய்தால் பொறுப்பு வந்துவிடும் என்று பலரும் கூறி கேட்டிருப்பீர்கள். அதே போல நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், திருமணத்திற்குப் பிறகு ஒரு சில பொறுப்புகளை கூடுதலாக எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். ஆண் மற்றும் பெண் இருவருக்குமே இது பொருந்தும். இதுவரை பழக்கமே இல்லாத ஒரு விஷயத்தை செய்யும்போது நிச்சயமாக தடுமாற்றம் ஏற்படும்.
எதிர்பார்ப்பு வேறு நிஜம் வேறு : எதிர்பார்ப்புகள் என்பது இயல்பானது. திருமணம் என்று வரும்போது எதிர்பார்ப்புகள் கூடுதலாக இருக்கும். என்னுடைய கணவன் அல்லது மனைவி இப்படியெல்லாம் இருக்க வேண்டும், இப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும், திருமண வாழ்க்கையை இப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருக்கிறேன் என்று எதிர்பார்ப்புக்கு எல்லையே இல்லை. ஆனால், எல்லா விஷயங்களுமே எதிர்பார்த்தது போல நடக்காது. எனவே ஒரு சில உண்மைகளை நீங்கள் ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும்.