அமைதியான சுபாவம் கொண்ட ஒருவரை இன்றைய கார்ப்பரேட் உலகம் நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. கார்ப்பரேட் நிகழ்ச்சிகள், ப்ராஜக்டுகளை கையாளுதல், மீட்டிங்ஸ், ப்ரொமோஷன் உள்ளிட்ட பல விசயங்களில் உங்களை ஓரம் கட்டி வைத்து விடுவார்கள். கார்ப்பரேட் உலகில், அமைதி சுபாவம் கொண்டவர்கள் நிலைத்து நிற்கவே மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும்.
சக ஊழியர்களுடன் நீங்கள் சகஜமாக பேசிப் பழக வேண்டும். புதிய ப்ராஜக்டுகள் அல்லது வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்க வேண்டும். மீட்டிங் அல்லது செமினார் போன்றவற்றில் பங்கேற்க வேண்டியிருக்கும். சில சமயங்களில் வெளியே சக ஊழியர்களுடன் கூட்டாக சென்று வெளியே சாப்பிடவும், டிரிங்க்ஸ் அருந்தவும் வேண்டியிருக்கும். ஆனால், அமைதியான சுபாவம் கொண்ட நபர்கள் பெரும்பாலும் இதுபோன்ற விஷயங்களை விரும்ப மாட்டார்கள். குறிப்பாக, மற்றவர்களுடன் இணைந்து இருப்பதைக் காட்டிலும் தனித்து இருக்கவே விரும்புவார்கள். அத்தகைய சூழலில் சில டிப்ஸ்களை நீங்கள் கடைப்பிடித்தால் மற்ற்வர்களுக்கு இணையான இடத்தை நீங்கள் பெற முடியும்.
நீங்கள் யார் என புரிந்து கொள்ளுங்கள் : முதல் விஷயம், நீங்கள் அமைதியான சுபாவம் உடையவர் என்பதை நீங்களே புரிந்து ஏற்றுக் கொள்வது தான். மற்ற மக்களிடம் இருந்து நீங்கள் வேறுபட்டு இருக்கிறீர்கள் என்பதை உணர வேண்டும். இதை புரிந்து கொண்டாலே உங்களைச் சுற்றியிலும் மாற்றங்கள் நிகழ தொடங்குவதை நீங்களே பார்க்க முடியும். இப்போது சௌகரியமான சூழலை உணரலாம். ஒவ்வொருவரும் வெவ்வேறு குணம் கொண்டவர்கள். அவர்களைப் போல முழுமையாக மாறா விட்டாலும் அட்ஜெஸ்ட் செய்தாலே போதுமானது.
நம்பிக்கையுடன் இருங்கள் : உங்களுக்கு தன்னிம்பிக்கை மிகவும் அவசியம். அலுவலகத்தில் உங்களை சுற்றிலும் நிறைய பேர் இருப்பார்கள். அதை தவிர்க்க இயலாது.அவர்களுடன் நீங்கள் மிகவும் நெருங்கி பழகாவிட்டாலும் சற்று இயல்பாக பேசுங்கள். இப்போது நீங்கள் எல்லாவற்றையும் புறக்கணிக்கிறீர்கள் என்ற தோற்றம் உருவாகாது. நீங்கள் பொறுப்புடன் பேச வேண்டிய சமயங்களில் கூச்சமும், தயக்கமும் இல்லாமல் அதைச் செய்ய வேண்டும்.
உங்கள் திறன்களை கவனியுங்கள் : ஒவ்வொரு நபரிடமும் ஒரு தனித் திறமை இருக்கும். உங்களில் என்ன திறன் இருக்கிறது என்பதை கண்டறிந்து அதை மற்றவர்களிடம் முன்னிறுத்துங்கள். குறிப்பாக, அமைதியான சுபாவம் கொண்டவர்கள் தன்னைச் சுற்றி நடப்பதை கூர்ந்து கவனிப்பவராகவும், எதையும் எளிதில் கற்பவராகவும் இருப்பார்கள். இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.