பிப்ரவரி 14 காதலர்களாக இருப்பவர்களுக்கு கொண்டாட்டமாகவும், காதலர்களாக இல்லாதவர்களுக்கு திண்டாட்டமாகவும் இருக்கும். பலர் இன்றைய நாளில் தாங்கள் விரும்புவோரிடம் காதலை சொல்லி வெற்றிகரமாக காதல் வாழ்க்கையை துவங்குவார்கள். சிலருக்கு அன்றைய தினம் தோல்வி தினமாக கூட அமையலாம். ஆனால் நீங்கள் மேற்சொன்ன கேட்டகிரியில் வராமல் சிங்கிளாக இருப்பவர் என்றால் காதலர் தின வாரம் மற்றும் நாளில் சந்தோஷமாக இருப்பதற்கான யோசனைகளை தேடுகிறீர்களா..? அப்படி என்றால் இங்கே சில வழிகளை பார்க்கலாம் வாருங்கள் . சிங்கிள் என்றால் பிரபல நம்பிக்கைகளுக்கு மாறாக காதலர் வாரம் அல்லது காதலர் தினத்தை நீங்கள் தனியாக செலவிடுவது முற்றிலும் சரி தான். காதலர் தினத்தை நீங்கள் தனியே கூட கொண்டாடலாம்.
உங்களை நேசியுங்கள்.. மெஷின் போல சென்று கொண்டிருக்கும் வாழ்க்கையில் நம்மை நாமே நேசிக்க, பாராட்டி கொள்ள மறந்து விடுகிறோம். எனவே இந்த காதலர் தினத்தில் நீங்கள் சிங்கிளாக இருந்தாலும் சரி, திருமணமானவராக அல்லது காதல் உறவில் இருப்பவராக இருந்தாலும் சரி உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்கி விருப்பமானதை செய்யுங்கள். காதலர் தினத்தில் நீங்கள் எப்படி சந்தோஷமாக இருக்கலாம்.?
தியானம்: மன அழுத்தத்தை குறைக்க, கவலையை கட்டுப்படுத்த மற்றும் சுய விழிப்புணர்வை மேம்படுத்த தியானம் உதவுகிறது. மேலும் எதிர்மறை எண்ணங்களை நிர்வகிக்க தினசரி தியானம் செய்வது பயனுள்ளது. காலை எழுந்தவுடன் அல்லது தூங்கும் முன் தியானம் செய்வது சிறந்த பலன்களை தருகிறது. அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்க்க உதவுகிறது.
புத்தகம் படிக்கலாம்: நீங்கள் ஒரு புத்தகம் வாசிக்கும் பழக்கம் உடையவர் என்றால் வாசிக்கும் பழக்கத்தை சில வருடங்களாக மறந்துவிட்டீர்கள் என்றால் அந்த பழக்கத்தை மீண்டும் காதலர் தினத்தில் இருந்து தொடங்குவது உங்களுக்கு வித்தியாசமான நாளாக அமையும். ஏனென்றால் உங்களுக்கு தெரியும் வாசிப்பு நம்மை ஒரு புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் கொண்டது என்று. புத்தகங்களை வாசிப்பது அது மிகவும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான செயல்களில் ஒன்றாகும்.
ஸ்பா செல்லலாம்: மசாஜ் செஷனை யார் தான் விரும்ப மாட்டார்கள்..? இந்த காதலர் வார இறுதி அல்லது காதலர் நாளில் நீங்கள் ஸ்பாவில் மசாஜ் செஷனை புக் செய்யலாம். நல்ல மசாஜ் அமைதியாக மற்றும் நிம்மதியாக உணர வைக்கும். ஸ்பா மசாஜ் உடனடியாக உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் உங்கள் உடலை தளர்த்த அனுமதிக்கிறது.