உங்களுக்குள் உள்ள ஆளுமைத் திறனை வெளிக் கொண்டு வரும் இடம்தான் பணியிடம் ஆகும். பணி சார்ந்த நெருக்கடிகளை நீங்கள் கையாளும் விதம் அல்லது பணி சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதம் ஆகியவை உங்களுக்குள் உள்ள திறமைகளை வெளிகாட்டுகின்றன. அதே சமயம், தொழில்முறை நாகரீகம் எதையும் கடைப்பிடிக்காத ஊழியர்கள் சிலர் மோசமாக நடந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அநாகரீகமான நடவடிக்கைகளை நீங்கள் கையாளும்போது உங்கள் மீது எதிர்மறையான எண்ணப்போக்கை ஏற்படுத்த இது காரணமாக அமைகிறது. எவையெல்லாம் அநாகரீகமான செயல்கள் என்பதற்கு சில எடுத்துக்காட்டுகளை இங்கே பார்க்கலாம்.
தனிப்பட்ட பிரச்சனைகளை அலுவலகத்திற்கு கொண்டு செல்லாதீர்கள் : அலுவலகத்தில் பணி சார்ந்த விஷயம் என்னவோ, அவற்றில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் தனிப்பட்ட பிரச்சனைகள் அல்லது குடும்ப விவகாரங்களை அங்கே கொண்டு செல்லக் கூடாது. எந்த நேரமும் நீங்கள் புலம்பதைக் கேட்கும் சக ஊழியர்களுக்கு அது அலுப்பை ஏற்படுத்தும். உங்களை பற்றிய வதந்திகள் வலம் வர தொடங்கிவிடும். அதுவே உங்களுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தாமதமாக பணிக்கு செல்வது : நீங்கள் அலுவலக்தில் முறையாக வேலை செய்கிறீர்களோ இல்லையோ, கால தாமதம் இல்லாமல் சரியான நேரத்திற்கு அலுவலகம் செல்வது மிக முக்கியமானது. அலுவலக நேரத்திற்கு 5 அல்லது 10 நிமிடத்திற்கு முன்னதாக வருவது, ஒரு மீட்டிங் நடக்கும் சமயத்தில் அனைத்தையும் தயார் நிலையில் வைத்திருப்பது போன்றவை பாராட்டத் தகுந்த விஷயங்கள் ஆகும்.
ஆணவத்துடன் செயல்படுவது : பணியிடத்தில் பொறுமையும், நிதானமும் இல்லாமல் திமிர் பிடித்தவரைப் போல நடந்து கொள்வதால் எந்த நன்மையும் கிடைக்காது. மற்றவர்கள் முன்னிலையில் நீங்கள் பணிவையும், கீழ்படிதலையும் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் தற்பெருமை பேசிக் கொண்டிருந்தால், சக ஊழியர்கள் உங்களை வெறுக்கத் தொடங்கி விடுவார்கள்.
குழுவில் இணையாமல் விலகி இருப்பது : ஒரு கை ஒலி எழுப்பாது. தனி மரம் தோப்பு ஆகாது. அதுபோல, அலுவலகத்தில் வெற்றி என்பது தனிநபரால் கிடைக்கக் கூடியது அல்ல. ஒட்டுமொத்த குழுவையும் சார்ந்தது. சக குழுவினரை அனுசரித்து, ஒற்றுமையாக பணியாற்றுபவரை தான் நிறுவனம் விரும்புகிறது. குறிப்பாக, எந்த சூழலையும் ஏற்க கூடிய ஒருவருக்கு எப்போதும் வரவேற்பு உண்டு. அது இல்லாத போது உங்களுக்கு பின்னடைவு ஏற்படும்.
குழப்ப மனநிலை கூடாது : அலுவலகத்தில் உங்கள் மனதும், சுற்றுப்புற இடமும் சுத்தமாக, தெளிவானதாக இருக்க வேண்டும். எந்த நேரமும் நீங்கள் குழப்பவாதியாக இருப்பது அல்லது உங்கள் மேஜையை சுத்தமின்றி வைத்திருப்பது போன்றவை உங்கள் மீதான நல்லெண்ணத்தை கெடுத்து விடும். எந்த சமயத்திலும் உங்கள் இலக்கு என்ன என்பதில் நீங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.