பயணங்கள் மனிதர்களுக்கு புது பரிமாணத்தை அளிக்கக்கூடியவை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆண்கள் மட்டுமே அதிகம் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று சமத்துவம் உயர உயர பெண்களும் பல இடங்களுக்கு பயணம் செய்ய தொடங்கி விட்டனர். அதுவும் 'சோலோ ட்ராவல்' என்று பெரும்பாலும் சொல்லப்படும் வகையில் தனியாகவும் பெண்கள் பயணம் செய்ய தொடங்கியுள்ளனர். இதுபோன்று பயணம் செய்வதால், பெண்கள் தங்களுக்குள் இருக்கும் மிக பெரிய ஆளுமையை வெளிக்கொண்டு வர முடியும். முக்கியமாக பெண்கள் தங்களை புதுவிதமாக அடையாளம் காண பயணங்கள் சிறந்த வழியாகும். இவ்வாறு தனியாக பயணம் செய்யும் போது பெண்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
பயணப் பைகள் : பொதுவாக பயணம் செல்லும்போது நமக்கு தேவையான பொருட்களை கொண்டு செல்வது வழக்கம். ஆனால், தனியாக பயணம் செய்யும்போது அதிக அளவிலான பைகளை எடுத்து செல்வதைத் தவிர்ப்பது நல்லது. உங்களுக்கு தேவையான அளவு பொருட்களை மட்டும் எடுத்து வைத்து, அவற்றை ஒரு சில பைகளில் பேக்கிங் செய்து விடுங்கள். மேலும் பயணத்தில் நீங்கள் அதிக பொருட்களை வாங்க விரும்புபவராக இருந்தால், உங்கள் பையில் அதற்கு கூடுதல் இடத்தை ஒதுக்கி வைத்து கொள்ளவும். இதனால் உங்கள் பயணம் இலகுவாக இருக்கும், பெரிய சிரமம் எதுவும் இருக்காது.
எலக்ட்ரானிக் சாதனங்கள் : தனியாக பயணம் செய்பவர்கள் அவசியம் சில எலெக்ட்ரிக் சாதனங்களை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். எப்போதும் பவர் பேன்க், ஹெட்ஃபோன் போன்றவற்றை எடுத்து கொள்ளுங்கள். பயணத்தின் போது உங்களின் மொபைலுக்கு சார்ஜிங் செய்ய சரியான இடம் கிடைக்குமா என்று தெரியாது. எனவே பவர் பேங்க் மிகவும் முக்கியம். இவற்றுடன் தேவையான கேபிள்களையும் மறக்காமல் எடுத்து கொள்ளுங்கள்.
அத்தியாவசியங்கள் : பெண்கள் பயணம் செய்யும் போது பல இடையூறுகள் வர கூடும். சிலருக்கு திடீரென்று மாதவிடாய் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே தனியாக பயணம் செய்யும் போது உதவுவதற்கு கூடுதல் நபர் இல்லாததால் உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளத் தேவையான பொருட்களை எடுத்து வைக்க வேண்டும். எனவே சானிட்டரி பேடுகள், பேப்பர் சோப், மருந்துகள், பேண்டேஜ்கள் ஆகியவற்றை பேக்கிங் செய்ய வேண்டும். தற்போது கொரோனா பெருந்தொற்று இருப்பதால் மாஸ்க் மற்றும் சானிடைசர் ஆகியவற்றையும் மறக்காமல் எடுத்துக் கொள்ளவும்.
டிராக்கர் : நீங்கள் தனியாக பயணம் செல்வதால் மிக ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். எனவே உங்களின் பைகளில் 'லக்கேஜ் ட்ராக்கரை' பயன்படுத்துவது நல்லது. ஒருவேளை உங்களது பைகள் தொலைந்து போனாலும் இவற்றைக் கொண்டு கண்டுபிடித்து விடலாம். முக்கியமாக வெளியூர்களுக்கு பயணம் செய்தால் ஆதார் கார்டு, அடையாள அட்டை, தடுப்பூசி போட்ட சான்றிதழ் போன்றவற்றை பாதுகாப்பாக தயார் செய்து கொள்ளுங்கள்.