சுற்றுலாக்களில் பல வகைகள் உண்டு. அதில் அதிகம் தெரியாத ஒரு வகை தான் டார்க் டூரிசம் (dark tourism)என்று அழைக்கப்படும் கருப்பு சுற்றுலா. என்ன கருப்பான இடங்களை பார்ப்பதா என்று கேட்காதீர்கள். துக்கம , துயரம், நிறைந்த பேரழிவுகள், இனப்படுகொலை போன்ற துயர நிகழ்வுகள் நடந்த இடத்தையோ அல்லது அதை சார்ந்த இடத்தையோ பார்ப்பதுதான் டார்க் சுற்றுலா. இதை துயர சுற்றுலா என்று சொல்வது மிக பொருத்தமாக இருக்கும்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள கேடாகம்ப்ஸ் (catacombs)என்பது நிலத்தடி சுரங்கங்களின் வலையமைப்பாகும். அங்கு நீங்கள் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் எலும்பு எச்சங்களைக் காணலாம். நோய்களால் மில்லியன் கணக்கான மக்கள் இறந்தபோது பாரிஸ் அதன் கல்லறைகளில் இடம் இல்லாமல் தவிர்த்த போது சுரங்கங்களை புதைக்கும் இடமாக பயன்படுத்தின. அதன் நினைவுகள்தான் இன்றும் சுற்றுலா தலமாக இருக்கிறது.
அணு ஆயுதம் என்ற வார்த்தையை கேட்டதும் உலகில் உள்ள எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது ஹிரோஷிமா அணுகுண்டுதான். உலக போரின் போது ஆகஸ்ட் 6, 1945 அன்று அமெரிக்க ஜப்பானை ஒடுக்குவதற்காக விண்ணில் இருந்து வீசிய அணுகுண்டு வெடித்த பிறகு எஞ்சியிருந்த ஒரே கட்டமைப்பான ஜென்பாகு டோம் இன்று ஹிரோஷிமாவில் அமைதி நினைவுச்சின்னமாக மாறியுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அல்காட்ராஸ் தீவு(alcatraz island) மற்றும் சிறைச்சாலை அன்றைய அமெரிக்காவின் அதிகபட்ச பாதுகாப்பு சிறைச்சாலையாக இருந்தது. இந்த சிறையில் உலகின் மிக பயங்கரமான குற்றவாளிகள் ஒரு காலத்தில் இருந்தனர். உலகின் மிகவும் பாதுகாக்கப்பட்ட தீவு சிறை என்று அறியப்பட்டாலும், 36 தப்பிக்கும் முயற்சிகள் நடந்தன. மூன்று கைதிகள் வெற்றிகரமாக தப்பினார்கள் என்று நம்பப்படுகிறது, ஆனால் உறுதியாக தெரியவில்லை.
ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவில் உள்ள கிகாலி இனப்படுகொலை நினைவகம், (kigali genocide memorial) உலகின் மிக பெரிய இனப்படுகொலைகள் ஒன்றான ருவாண்டா இனப்படுகொலையை நினைவுகூருகிறது, அங்கு 1994 ஆம் ஆண்டு ஹுடு, டுட்ஸி மற்றும் துவா ஆகிய இனக்குழுக்களுக்கு இடையே நடந்த உள்நாட்டுப் போரின் போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.
அந்தமான் நிகோபார் தீவின் தலைநகரமான போர்ட் பிளேரில்உள்ள செல்லுலார் சிறை( cellular jail) அல்லது காலாபானி என்று அழைக்கப்படும் கட்டிடம், ஆங்கிலேயர் காலத்தில் வாழ்ந்த அரசியல் கைதிகள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறைவைத்த அதிகபட்ச பாதுகாப்புச் சிறையாக இருந்தது, இந்தக் கைதிகளில் பலர் தூக்கிலிடப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் உள்ள மற்றொரு இடம், ஓரடோர்-சுர்-கிளேன் Oradour-sur-Glane. இதுவும் இரண்டாம் உலகபொருடன் சம்பத்தப்பட்ட இடம். இந்த நகரத்தில் இருந்த சாலை, வீடு, தேவாலயம் என்று எல்லா இடங்களில் இருந்த ஒவ்வொருவரும் சுற்றி வளைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இன்றும் இந்த நகரம் ஆள் அரவம் இன்றி அடைந்த கட்டிடங்கள், துருப்பிடித்த வாகனங்களுடன் காணப்படுகிறது