நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச தினம் என்று குறிப்பிடப்படும் உலக பாரம்பரிய தினம் சமீபத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நாள் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாக்க மற்றும் மேம்படுத்துவதற்கென்றே அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
40 உலக பாரம்பரிய தளங்களுடன், உலகிலேயே அதிக பாரம்பரிய தளங்களைக் கொண்ட 6-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட 32 கலாச்சார, 7 இயற்கை மற்றும் 1 கலப்பு தளம் (mixed site) இந்தியாவில் உள்ளது. நாட்டில் அதிகம் பார்வையிடப்பட்டு வரும் பாரம்பரிய தளங்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்..
புத்த கயா, பீகார்:
பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயா மாநில தலைநகர் பாட்னாவில் இருந்து சுமார் 95 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அற்புத இடமாகும். புத்தர் ஞானம் பெற்ற இடம் இது என்பதால், புத்த மதத்தை பின்பற்றுபவர்களுக்கு இந்த இடம் ஒரு முக்கியமான மத மையமாக திகழ்கிறது. இங்கே தான் புத்தர் ஞானமடைந்த 'மஹா போதி' மரமும், மிகப்பெரியதொரு புத்த கோயிலும் அமைந்திருக்கிறது. புத்தர் ஞானமடைந்த பின் அதாவது 200 ஆண்டுகளுக்கு பின்னர் கி.மு 250ம் ஆண்டு இங்கே வந்த அசோக மன்னர் போதி மரத்துக்கு நேர் கிழக்கே மிக பெரிய கோயிலை கட்டி உள்ளார். உலகம் முழுவதிலுமிருந்து மக்கள் அசோகரால் கட்டப்பட்ட மகாபோதி கோயிலின் பிரமாண்டத்தைக் காண இங்கு வருகிறார்கள்.
ஹம்பி (கர்நாடகா):
கர்நாடகாவில் உள்ள ஹம்பி ஒரு அழகான யுனெஸ்கோ உலக பாரம்பரிய இடமாக திகழ்கிறது. சிறிய ஊரான ஹம்பியில் இருக்கும் நூற்றுக்கணக்கான வரலாற்று சின்னங்கள் நம் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. திராவிட கலை மற்றும் கட்டிடக்கலையை சித்தரிக்கும் வகையில் உள்ளது ஹம்பி. குறிப்பிடத்தக்க பாரம்பரிய நினைவுச்சின்னமாக விருபாக்ஷா கோவில் உள்ளது. ராமாயண கதைகளை சொல்லும் சிற்பங்கள், சுவரோவியங்கள் என பல அடங்கி இருகின்றன.
கஜுராஹோ (மத்திய பிரதேசம்):
மத்திய பிரதேச மாநில தலைநகரான போபாலிருந்து 326 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிறுநகரம் கஜுராஹோ. மிகவும் புகழ்பெற்ற இந்திய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருக்கும் கஜுராஹோவில், மிக அதிக அளவிலான மத்தியகால இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன. குறிப்பாக கஜுராஹோ கோவில் சிற்பங்களுக்காக பிரபலமானது. கஜுராஹோ கோவில்கள், கடவுள் சிலைகள் அருகிலும் கோவிலுக்கு உள்ளேயும் பாலியல் அல்லது சிற்றின்ப கலைகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் சில வெளிப்புற சிற்பங்கள் சிற்றின்ப கலைகளை கொண்டிருக்கின்றன.
தாஜ்மஹால் (உத்தரபிரதேசம்):
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலின் வெள்ளை பளிங்கு கட்டிடக்கலை அழகு, உலகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கிறது. ஆக்ராவில் யமுனை ஆற்றங்கரையில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அவரது மறைந்த மனைவி மும்தாஜின் நினைவாக 22,000 வேலையாட்களை கொண்டு 1631 - 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டி முடிக்கப்பட்டது. இது இந்தியாவில் முஸ்லீம் கலையின் சிறந்த கட்டிட கலையாக கருதப்படுகிறது.
அஜந்தா- எல்லோரா குகைகள் (மகாராஷ்டிரா):
அஜந்தா குகைகள் இந்தியாவின் முதல் உலக பாரம்பரிய தளமாகும். இது புத்த மத சிற்பங்களும் ஓவியங்களும் காணப்படும், குகைகளை குடைந்து உருவாக்கப்பட்ட குடைவரை கோயில்கள் அடங்கிய இடம். இந்த குகைகள் கிமு இரண்டாம் நூற்றாண்டு முதல் கிபி 650 வரையிலானவை. அதே போல எல்லோரா குகைகள் அவற்றின் Indian-rock cut கட்டிடக்கலையை அற்புதமாக வெளிப்படுத்துகின்றன.