பயணம் செய்வது என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. தாங்க முடியாத பிரச்சினை அல்லது மன அழுத்தத்தின் போது ரிலாக்ஸாக ஒரு குட்டி ரைடு சென்று வந்தால், கவலைகள் கரைந்து போனது போல் இருக்கும். பிரச்சனைகள் முழுவதுமாக தீரவில்லை என்றாலும் அந்த நேரத்தில் மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்க கூடிய விஷயமாக இருக்கும். மேலும் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ நீண்ட சுற்றுலா பயணங்களை மேற்கொள்வது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால் கடந்த கொரோனா பெருந்தொற்றினால் பயணம் செய்ய விரும்புபவர் பலரும் தங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.எப்படி நம் பயணத்தை திட்டமிட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.
நீங்கள் எந்த இடத்திற்கு பயணம் செய்ய திட்டமிட்டுள்ளீர்களோ அந்த இடத்தை பற்றிய அதிக அளவு தகவல்களை சேகரித்துக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் தேர்வு செய்து வைத்துள்ள அந்த இடம் உங்கள் பொழுதை கழிப்பதற்கு ஏதுவானதாக இருக்குமா, உங்கள் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யுமா என்பதை சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அங்குள்ள போக்குவரத்து வசதிகள், பருவநிலை மாற்றங்கள், தங்கும் விடுதிகள் சுற்றியுள்ள இடங்கள் ஆகியவற்றை பற்றி தெளிவான தகவல் உங்களிடம் இருக்க வேண்டும்.
பயணங்களின் போது ஏற்படும் சிறு சிறு பிரச்னைகள் மற்றும் தவிர்க்க முடியாமல் ஏற்படும் கால தாமதங்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு அதன்படி திட்டத்தை வகுக்க வேண்டும். உதாரணத்திற்கு போக்குவரத்து நெரிசலும் அல்லது எதிர்பாராத பருவநிலை மாற்றமோ, விமானம் அல்லது ரயில் தாமதமும் ஏற்படலாம். அந்த நேரத்தில் பொழுதை கழிப்பதற்கும் பசியாறுவதற்கும் உங்களிடம் போதுமான உணவுப் பொருட்கள் மற்றும் இதர தேவையான வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பயணம் செய்வதற்கு தேவையான கோப்புகள் அடையாள அட்டைகள் மற்றும் இன்றியமையாத எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் ஆகியவற்றையும் சரியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக எப்போது பயணம் சென்றாலும் உங்களுக்கான அடையாள அட்டையை கொண்டு செல்ல வேண்டும். மேலும் உங்கள் குழந்தையுடன் நீங்கள் சென்றால் குழந்தைகளுக்கான அடையாள அட்டைகள் மற்றும் அவர்களுக்கான அத்தியாவசிய பொருட்கள் ஆகியவை இருப்பதையும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நீங்கள் சர்வதேச பயணத்தை மேற்கொண்டால் உங்கள் பாஸ்போர்ட்டுக்கு என்று தனி பையை எடுத்து அதில் பாஸ்போர்ட்டுகளை வைத்துக் கொள்வது நல்லது.
பயணத்திட்டத்தை சரியாக வகுப்பதற்கு யாரேனும் வல்லுனர் ஒருவரின் உதவியையோ அல்லது வலைதளங்களின் உதவியையும் நாடலாம். அந்த இடத்தின் சிறப்பான உணவு வகைகள் நல்ல ஷாப்பிங் செய்ய முடிந்த இடங்கள் அவசர காலத்தில் அணுக வேண்டிய நபர்களின் தொலைபேசி எண் விவரங்கள் ஆகியவற்றை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.