பெரும்பாலான நாடுகளில் நீங்க வாடகைக்கு எடுக்கும் வாகனங்களை ஓட்ட நீங்கள் சர்வதேச ஓட்டுநர் அனுமதி (IDP) வைத்திருக்க வேண்டும் என்று கோரும் போது, சில நாடுகளில் சரியான இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால் போதும் என்கின்றனர். ஓட்டுநர் உரிமம் மட்டும் வைத்து கொண்டு வாகனம் ஒட்டக்கூடிய நாடுகளை பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
ஜெர்மனி: இந்திய போல இடது பக்க வாகன பாதை அல்லாமல், வலது பாதையாக இருந்தாலும், இந்த நாட்டில் இந்திய உரிமத்துடன் நீங்கள் எந்த வகையான கார் /அல்லது இரு சக்கர வாகனத்தையும் ஓட்டலாம். உங்கள் ஓட்டுநர் உரிம தகவல்கள் உள்ளூர் மொழியில் இருந்தால், பயணத்திற்கு முன்பு அந்த சான்றிதை ஜெர்மனியின் உள்ளூர் அதிகாரிகளிடம் கொடுத்து அதை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து வாங்கிக்கொள்ள வேண்டும். ஆறு மாதங்கள் வரை ஜெர்மனியில் வாகனம் ஓட்ட நம் நாட்டு உரிமத்தைப் பயன்படுத்தலாம்.
இங்கிலாந்து: உங்களிடம் செல்லுபடியாகும் இந்திய ஓட்டுநர் உரிமம் இருந்தால், நீங்கள் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் ஒரு வருட காலத்திற்கு வாகனம் ஓட்டலாம். மேலும் இது இடது லேன் கொண்ட சாலை என்பதால் ஓட்டுவதில் எந்த சிரமமும் இருக்காது. ஒரே ஒரு குறிப்பிடவேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகை வாகனத்தை மட்டுமே நீங்கள் ஓட்ட முடியும்.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய நாட்டிலும் இடது லேன் பயன்பாடு முறை தான் உள்ளது. எனவே, நீங்கள் அந்நாட்டில் சுதந்திரமாக வாகனம் ஓட்ட முடியும் . ஆனால் அந்த நாட்டின் வடக்கு பகுதிகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் வாகனம் ஓட்ட அனுமதி இல்லை. மேலும், பிரிட்டனைப் போலவே, உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வகை வாகனத்தை மட்டுமே நீங்கள் இங்கும் ஓட்ட முடியும்.
தென்னாப்பிரிக்கா: உங்களிடம் உங்கள் படம் மற்றும் கையொப்பத்துடன் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இருந்தால் தென்னாபிரிக்காவின் எந்த இடத்திற்கு நீங்கள் வாகனம் ஓட்டிச்செல்லலாம். ஆனால், கார் வாடகை நிறுவனங்கள் ஓட்டுநர் உரிமத்தை சரிபார்ப்பிற்கு கேட்கலாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே நீங்கள் அதையும் எடுத்துச் செல்வது நன்று.
ஸ்வீடன்: ஸ்வீடெனில் நீங்கள் சொந்தமாக கார் ஓட்டிச்செல்ல விரும்பினால் உங்கள் ஓட்டுநர் உரிமம், ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், ஸ்வீடிஷ், டேனிஷ், நார்வேஜியன் ஆகிய மொழிகளில் ஏதேனும் ஒன்றில் அச்சிடப்பட்டிருப்பதை உறுதி செய்துகொண்டால் போதும். அதுடன் ஒரு புகைப்படம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட மற்றொரு அடையாள அட்டையை எடுத்துச் செல்லவும்.
அமெரிக்கா: உண்மையாகவே நீங்கள் அமெரிக்காவில் உங்கள் இந்திய உரிமத்தைப் பயன்படுத்தி வாகனத்தை ஓட்டிச்செல்ல முடியும். ஆனால் விதிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எனவே, நீங்கள் சாலையில் செல்வதற்கு முன், குறிப்பிட்ட மாநிலத்தின் மோட்டார் வாகனத் துறையை விதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். சில மாநிலங்களுக்கு நீங்கள் சர்வதேச ஓட்டுநர் உரிமத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.