அங்கோர் வாட் 200,000 க்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நவீன கம்போடிய நகரமான சீம் ரீப்பின் வடக்கே சுமார் ஐந்து மைல் தொலைவில் அமைந்துள்ளது. கம்போடியாவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அங்கோர் வாட் முதலில் இந்து கடவுளான விஷ்ணுவுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஆனால் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புத்த கோவிலாக மாறியது.
இப்பகுதியின் கெமர் மொழியில் "கோயில் நகரம்" என்று மொழிபெயர்க்கப்படும் இக்கோவில், 1113 முதல் 1150 வரை இப்பகுதியை ஆண்ட இரண்டாம் சூர்யவர்மன் பேரரசரால் கட்டப்பட்டது, இது அவரது பேரரசின் மாநில கோயிலாகவும் அரசியல் மையமாகவும் இருந்தது. அதன் பின்னர் சூர்யவர்மன் பதவி விலகியபோது அங்கோர் வாட் நகரமும் களை இழந்தது.
அதன் பின்னர் உருவான புதிய பேரரசர் ஜெயவர்மன் VII தனது தலைநகரை அங்கோர் தோம் என்ற இடத்திற்கு மாற்றினார். அதேபோல அவர்களின் மாநில கோவிலை பேயோனுக்கு மாற்றினார். அதே நேரம் இப்பகுதியின் புத்த மதத்திற்குள் அங்கோர் வாட்டின் முக்கியத்துவம் அதிகரித்ததால், அந்த இடத்தைச் சுற்றியுள்ள புராணக்கதைகளும் அதிகரித்தன.
பல பௌத்தர்கள் கோவிலின் கட்டுமானம் இந்திரன் கடவுளால் கட்டளையிடப்பட்டதாகவும், வேலை ஒரே இரவில் நிறைவேற்றப்பட்டதாகவும் நம்புகிறார்கள். இருப்பினும், அறிஞர்கள் கூற்றுப்படி, அங்கோர் வாட் கட்டுவதற்கு பல தசாப்தங்கள் ஆனது. 30 ஆண்டுகள், 300,000 தொழிலாளர்கள் மற்றும் 6,000 யானைகள் பணியாற்றி கட்டியதாக கூறுகின்றனர்.
15 அடி உயர சுவர், பரந்த அகழியால் சூழப்பட்ட இந்த கோவில் மற்றும் நகரத்தின் பெரும் பகுதி இன்றும் நிற்கிறது. இந்த கோவிலின் பிரதான சன்னதி மேல் இருக்கும் கோபுரம் சுமார் 70 அடிக்கு உயர்கிறது. கோயிலுக்கு வடக்கே பேரரசரின் அரண்மனை இருந்ததாக நம்பப்படுகிறது. ஆனால் போர், பூகம்பம், காரணமாக இது சேதமடைந்துவிட்டது.
கோவில் சுவர்கள் இந்து மற்றும் பௌத்த மதங்களில் உள்ள முக்கிய தெய்வங்கள் மற்றும் உருவங்கள் மற்றும் அதன் கதை பாரம்பரியத்தில் முக்கிய நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரக்கணக்கான புதைபடிவங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. பேரரசர் இரண்டாம் சூர்யவர்மன் நகரத்திற்குள் நுழைவதைச் சித்தரிக்கும் ஒரு சிற்பம் கூட உள்ளது.