பட்வோன்-கி-ஹவேலி : 19 ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் ஐந்து ஜெயின் சகோதரர்களால் கட்டப்பட்ட பட்வோன்-கி-ஹவேலி, ஒன்றோடொன்று ஒட்டிய ஐந்து வீடுகளின் தொகுப்பாகும். வெளிப்புற மாதங்களில் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடுகள் உள்ளன. மைய முற்றத்தைச் சுற்றி அமைக்கப்பட்ட அறைகளின் சில சுவர்களில் நேர்த்தியான ஓவியங்களின் எச்சங்கள் உள்ளன.
பல சுவர்களில் அழகான 'ஜரோகாக்கள்' (கல் ஜன்னல்கள்) , முற்றம் இருக்கின்றன. இதன் வழியாக மாடியில் இருந்து கோட்டையின் அற்புதமான காட்சிகளை காணும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்த கட்டிடத்தில் ராஜஸ்தானின் பாரம்பரிய ப்ரோகேட்ஸ் மற்றும் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ஜவுளிகளை சுற்றுலாப் பயணிகளுக்கு விற்கும் கடைகள் உள்ளன.
சலீம் சிங்-கி-ஹவேலி :அதே 19 ஆம் நூற்றாண்டில் ஜெய்சல்மேரின் பிரதம மந்திரியின் பெயரால் சிமெண்ட் அல்லது மோட்டார் பயன்படுத்தாமல் கல்லால் மட்டுமே கட்டப்பட்ட ஒன்று தான் சலீம் சிங்-கி-ஹவேலி. கல்லில் செதுக்கப்பட்ட யானைகள் உங்களை ஹவேலிக்குள் வரவேற்கின்றன. இந்த ஹவேலி முதலில் மஹாராஜாவின் அரண்மனையின் உயரத்துடன் பொருந்தக்கூடிய இரண்டு கூடுதல் மர மாடிகள் இருந்தன என்று புராணக்கதை கூறுகிறது. ஆனால் பிற்காலத்தில் அவை இடிக்கப்பட்டு கல்கட்டிடம் மட்டும் உள்ளது.
நாத்மல்-கி-ஹவேலி: 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரு சகோதரர்களால் கட்டப்பட்ட இந்த ஹவேலியில் இன்னும் ஓரளவு மக்கள் வசிக்கின்றனர். வெளிப்புறம் அழகாக மினியேச்சர் பாணி ஓவியங்கள் , மஞ்சள் மணற்கற்களால் செதுக்கப்பட்ட வலிமைமிக்க யானைகள் அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.நகரத்தை இருபுறம் இருந்து கண்காணிக்க கட்டப்பட்டதால் இந்த ஹவேலி இருபுறமும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருக்கும்.