இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட புகுன் லியோசிச்லா,இந்தியாவில் வாழும் மிகவும் ஆபத்தான உயிரினத்தில் ஒன்றாகும். 1995 இல் ஈகிள்னெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இது 11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2006 இல், புதிய இனமாக அடையாளப்படுத்தப்பட்டது. சில ஆயிரங்களில் காணப்பட்ட இந்த பறவை இனம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 22 என்ற எண்ணிக்கையை பெற்றது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மேற்கு கமெங் மாவட்டத்தில் உள்ள சின்சுங் கிராமத்தைச் சேர்ந்த புகுன் சமூகம் தான் புகுன் லியோசிச்லாவைபாதுகாத்து வருகிறது.
உலகில் மருத்துவ பலன்களுக்காக கடத்தப்படும் விலங்குகளில் ஒன்று சீன பாங்கோலின். நம் ஊரில் எறும்புத்தின்னி என்று சொல்லும் இந்த விலங்கின் எண்ணிக்கை என்பது மிக சொற்பமாக மாறி வருகிறது. சீன பாங்கோலின் எண்ணிக்கை சீனாவிலேயே கிட்ட தட்ட அழிந்து வருகிறது என்றே சொல்லலாம் ஆனால், இந்தியாவில் மணிப்பூரில் உள்ள தமெங்லாங்கில் சீன பாங்கோலின் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.
உள்நாட்டில் நோல்-கஹோரி என்று அழைக்கப்படும் பிக்மி பன்றிகள் இந்தியாவில் வாழும் அரிய விலங்கினத்தில் ஒன்று. 10 அங்குலம் உயரமுள்ள இந்த சிறிய அளவிலான பன்றிகள் வாழும் ஒரே இடம் அசாமில் உள்ள மனாஸ் தேசிய பூங்கா ஆகும். கூச்ச சுபாவம் உள்ள இந்த விலங்குகளை அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது. மொத்தமே 200 பிக்மி பன்றிகள்தான் மிஞ்சி இருக்கிறதாம்.
ஒரு காலத்தில் ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பரவி, ஏராளமான எண்ணிக்கையில் சுற்றித்திரிந்த கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இன்று ராஜஸ்தான் காடுகளில் சுமார் 150 நபர்கள் மட்டுமே உள்ளன. நகரமயமாதல், நவீன விவசாயம் , மின்கம்பிகள் என்று எல்லாம் வந்து கிரேட் இந்தியன் பஸ்டர்ட் இறப்பிற்கு காரணமாகிவிட்டது. உயர் அழுத்த மின் கம்பிகளில் சிக்கி இறந்த பறவைகள் தான் அதிகம்.