குகைகள் என்றால் மலைகளில் அல்லது குன்றுகளின் அடிவாரத்தில் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடலுக்கு அருகில் உள்ள பாறைகள் உப்பு நீரால் அரிக்கப்பட்டு கூட குகைகள் உருவாகும். அந்த குகைகளுக்கு கப்பல் அல்லது தோணி மூலம் செல்லலாம். கீழே தண்ணீர் மேலே பாறையால் ஆன குகை என்று ரம்யமாக இருக்கும். அப்படியான உலகின் சில கடலோர குகைகளை உங்களுக்கு சொல்கிறோம்.
மத்திய அமெரிக்காவில் உள்ள மெக்சிகோ நாட்டில் துலூம் என்ற கடலோரப் பகுதி உள்ளது. அங்கு கடலுக்கு அருகிலேயே செனோட் டோஸ் ஓஜோஸ் என்று அழைக்கப்படும் இரண்டு குகைகள் இரண்டு 70 அடி holesink எனப்படும் கடல் குழிகளால் உருவாக்கப்பட்டுள்ளன. அவை குறுகிய பாதையால் நீருக்கடியில் இணைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் வழிகாட்டிகளோடு ஸ்கூபா டைவிங் மூலம் இந்த இரண்டு குகைகளையும் நீருக்கடியில் வாழும் மீன்களையும் இறால்களையும் பார்க்கலாம்.
பிளாயா டி லாஸ் கேடட்ரல்ஸ் அல்லது கதீட்ரல்களின் கடற்கரை, என்பது ஸ்பெயினின் கான்டாப்ரிக் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த குகை பாதுகாப்பிற்காக ஒவ்வொரு நாளும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பாறை வளைவுகள், குகைகள் கொண்ட இந்த இடத்தை ஒரு நாளைக்கு இரண்டு முறை ஏற்படும் குறைந்த அலைகளின் போது மட்டுமே அணுக முடியும். ஆன்லைனில் முன்பதிவு செய்தால் தான் வாய்ப்பு கிடைக்குமாம்.
அமெரிக்காவின் விஸ்கான்சின் பகுதியில் உள்ள அப்போஸ்டல் தீவு குகைகள் கடல் குகைகள் என்று சொல்ல முடியாது. அனால் இதுவும் நீர் அரிப்பில் ஏற்பட்ட குகை தான். சுப்பீரியர் ஏரி நீரால் அரிக்கப்பட்டு குகையாக மாறியது. குளிர்காலத்தில் உறையும் ஏரியின் நீர் உருகும் போது, குகைகளின் சுவர்கள் மற்றும் கூரைகளில் வைரங்களைப் போல மின்னும். சிவப்பு மணற்கற்களால் ஆன பாறைகள் அழகை மெருகேற்றும்.
தாய்லாந்து செல்லும் பயணிகளுக்கு அங்குள்ள புத்த கோவில்கள், வினோத உணவுகள் தாண்டி இருக்கும் ஆச்சரியம் அதன் கடற்கரைகளும் அதன் நடுவே உள்ள குன்று- குகைகளும் தான். முக்கியமாக தாய்லாந்தில் உள்ள Ao Phang Nga தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக பாங் நாகா விரிகுடா குகைகள் அமைந்துள்ளன. நீல/பச்சை நீரின் நடுவே இருக்கும் குன்று அடிவாரத்தில் இந்த குகை அமைந்துள்ளது. இதை அந்நாட்டில் பாரம்பரிய படக்கான கோயா படகில் சென்று பார்க்கலாம்.
இத்தாலியின் சார்டினியா தீவில் அமைந்துள்ள நெப்டியூன் குரோட்டோ குகை இரண்டு முக்கிய கனிம வைப்புகளைக் கொண்டுள்ளது. ஆனால் இது அதன் ஸ்டாலாக்டைட்டு வகை புவியியல் அமைப்பிற்காக அறியப்படுகிறது. ஸ்டாலாக்டைட்டுகள் என்பது பனிக்கட்டிகள் போல் கூரையிலிருந்து கீழே வளரும் தாதுப் படிவுகளைக் குறிக்கும். இந்தக் குகை சுமார் இரண்டு மில்லியன் ஆண்டுகள் பழமையானதாக மதிப்பிடப்பட்டுள்ளது மற்றும் இது மிகவும் பிரபலமான சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இந்த கடல் குகையின் முழு பரப்பளவு மிகப்பெரியதாக இருந்தாலும், சில நூறு மீட்டர்கள் மட்டுமே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் மரியேட்டா தீவுகள் அருகே அமைந்துள்ள பிளாயா எஸ்கோண்டிடாவை கடல் குகை என்று அழைப்பது சற்று தவறுதான். முன்னர் ஒரு கடல் குகையாக இருந்தது. ஆனால் நீண்ட காலத்திற்கு முன்பு, குகையின் கூரை சரிந்து வட்ட வடிவ சுற்றம் மட்டுமே உள்ளது. அதன் தோற்றத்தின் காரணமாக "வானத்தின் கண்" என்று குறிப்பிடப்படும் இது இப்போது ஒரு மறைக்கப்பட்ட கடற்கரையாக உள்ளது.
போர்ச்சுகலின் தெற்கு கடற்கரையில் உள்ள பெனாகில் என்ற சிறிய மீன்பிடி கிராமத்தில் பெனாகில் குகை அமைந்துள்ளது. முன்கூட்டியே பதிவு செய்தால் படகுப் பயணம் மூலம் இந்தக் குகையை அடையலாம். நீங்கள் ஒரு வலுவான நீச்சல் வீரராக இருந்தால், அதோடு இந்த குகை அருகே குறைந்த அலையாக இருந்தால், நீங்கள் குகைக்குள் கூட நீந்தலாம்.