தமிழில் ‘பேப்பர் ராக்கெட்’, மலையாளத்தில் ‘கூடே’ போன்ற படங்கள் எல்லாம் இந்த கேரவேன் பயணங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை தான். ஒரு வாகனத்திற்குள் உள்ள வீடு என்று வர்ணிக்கப்படும் கேரவேன்கள், பயணத்தின் போது வீட்டின் வசதிகளை வழங்கும் வாகனமாக அமையும். குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோருக்கும் தேவையான எல்லா வசதிகளையும் இந்த கேரவேனில் ஏற்பாடு செய்துகொள்ள முடியும்.
மும்பையிலிருந்து கோவாவிற்கு :சாலைப் பயணங்களைச் செய்ய விரும்புவோருக்கு மும்பை - கோவா சாலை மிகவும் பிடித்தமான பாதையாக நிச்சயம் இருக்கும் . மும்பையிலிருந்து கோவா வரையிலான சாலைப் பயணம் மேற்கு தொடர்ச்சி மலை சாரலில் பசுமையான சூழலுடன் அமைந்திருக்கும். சிறந்த கட்சி அனுபவங்களை பெறுவதற்கு தேசிய நெடுஞ்சாலை 4 அல்லது தேசிய நெடுஞ்சாலை 66 ஐ தேர்வு செய்யலாம்.
கொல்கத்தா முதல் ஷில்லாங் வரை : கலைகளின் நகரமான கொல்கத்தாவிலிருந்து நாட்டின் மிக அழகான வடகிழக்கு இந்தியாவின் பொக்கிஷங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஷில்லாங், நகரத்திற்கு செல்லும் பாதை உண்மையில் கண்களை கொள்ளை கொள்ளும் என்றே சொல்ல வேண்டும். கிழக்கு இமயமலைகள் வழியாக செல்லும் இந்த nh 27 பாதை கிழக்கு இந்தியாவை மற்ற இந்திய மாநிலங்களிடன் இணைக்கும் ‘சிக்கன் நெக் ‘(chicken neck) என்று சொல்லப்படும் சிலிகுடி வழியாக போகும். புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த இடத்தை மிஸ் பண்ண தோணுமா என்ன?
ஷில்லாங்கில் இருந்து மௌலினோங்கிற்கு : உங்கள் கொல்கத்தா - ஷில்லாங் சாலைப் பயணத்தைத் தொடர விரும்பினால் . ஷில்லாங்கில் இருந்து மேகலாயாவின் அழகிய கிராமமான மவுலினோங் வரை உங்களது பயணத்தை தொடர வேண்டும். அப்படி இல்லையேல், மாற்றாக, நீங்கள் கவுகாத்தியில் இருந்து தொடங்கி, ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் என்று வர்ணிக்கப்படும் மவுலினோங்கிற்குச் செல்லலாம். இந்த இடத்தின் அழகிய நிலப்பரப்பு., பழங்குடி மக்களின் கலாச்சாரத்தோடு சாலை பயணம் மேலும் அழகு பெரும்.
பெங்களூரில் இருந்து ஹம்பிக்கு செல்லும் வழி : ஒரே மாநிலத்திற்குள் இருக்கும் இரண்டு இடங்கள் தான் என்றாலும் இறுதி இலக்குகள் இரண்டுமே அழகு கொஞ்சும் இடங்களாக இருக்கும்போது பாதை எப்படி இருக்கும் என்று சொல்ல வேண்டுமா என்ன? மும்பை- கோவா சாலையை போலவே விஜயநகர தலைநகரம் செல்லும் இந்த சாலையும், மேற்கு தொடர்ச்சி மலையின் சாரலில் தான் அமைந்திருக்கும். மிகக் குறுகிய பயணமாக இருந்தாலும் வார இறுதி விடுமுறைக்கு சரியான தேர்வாக இருக்கும். அதே போல தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பயணம் புதுமையான நவீன அனுபவத்தை தரும்.
சென்னை டூ பாண்டிச்சேரி : சென்னையிலிருந்து பாண்டிச்சேரிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக செய்யும் பயணம் பற்றி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. வங்க கடலின் காற்றை வாங்கிக்கொண்டே செல்லும் இந்த பயணம் நிச்சயம் அலாதியானது. பிரெஞ்சு காலனித்துவ குடியிருப்புகளின் அழகை நீங்கள் அனுபவிப்பதோடு நண்பர்களோடு கேரவேனில் சென்று பார்ட்டி செய்து விட்டு வரலாம்