இந்து புராணங்களின் படி முன்னர் இருந்த சமூகம், தாய்வழி சமூகமாக இருந்தது. பெண்களை தெய்வங்களாக வழிபடும் வழக்கம் இருந்தது. யோகினிகள் சக்தி வாய்ந்த கடுமையான பெண் உருவங்களாக சித்தரிக்கப்படுகிறார்கள், தாந்த்ரீக நடைமுறைகளுடன் தொடர்புடையவர்கள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றும் வரங்களை வழங்கும் திறன் கொண்டவர்கள் என்று நம்பப்படுகிறது.
சாதாரண கோவில்கள் போல் அல்லாமல், யோகினி கோவில்கள் சற்று தோற்றத்திலேயே வேறுபட்டு இருக்கும். யோகினி கோவில்களில் பிரதான சிவன்-பார்வதி சன்னதியைச் சுற்றி வட்ட வடிவில் 64 யோகினிகளின்சிலை கற்களில் செதுக்கப்பட்டு இருக்கும். வழக்கமான சதுர அல்லது செவ்வக பிரகாரம் / கோவில் அமைப்பு போல் அல்லாமல் இது வட்ட வடிவத்தில் காணப்படுவதே தனி ஸ்பெஷாலிட்டி.
இந்தியாவில் 4 யோகினி கோவில்கள் உள்ளன . இந்தக் கோவில்கள் 9 மற்றும் 12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலச்சூரி, சண்டேல் மற்றும் பிரதிஹாரா வம்சங்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. மற்ற தெய்வங்களின் கோவில்களை போல் இதற்கு கோபுரமோ மேல்தளமோ இருக்காது காற்று உலவும் திறந்த வெளியாகத் தான் இருக்கும்.
கஜுராஹோ, மத்தியப் பிரதேசம்: மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ கோவில் வளாகத்தில் 64 யோகினி கோவில் உள்ளது. 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இது கஜுராஹோவில் எஞ்சியிருக்கும் மிகப் பழமையான கோவிலாகும். மற்ற இடங்களில் உள்ள யோகினி கோவில்களைப் போலல்லாமல், இது ஒரு செவ்வக வடிவத்தைக் கொண்டுள்ளது, ஆனால் இதுவும் வெட்டவெளி கோவில் தான்.
மிட்டாலி, மத்தியப் பிரதேசம்: மொரேனா மாவட்டத்தில் கோவில் வளாகம் அமைந்துள்ளது. இக்கோவில் ஏகதர்சோ மகாதேவா கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலுக்குச் சென்றால், சிவன் சிலைகள் நிறைந்த 65 இடங்களைக் கொண்ட திறந்த வட்ட முற்றத்தைக் காணலாம். இந்த இடங்களில் ஒரு காலத்தில் ஒரு தெய்வம் மற்றும் 64 யோகினிகளின் சிலைகள் இருந்தன என்று கூறுகின்றனர்.