உள்நாட்டு சுற்றுலாவை பற்றி நாம் பேசும் போது அண்டை மாநிலமான கேரளாவை தவிர்த்து விட்டு நாம் யோசிக்க முடியாது. கடவுளின் சொந்த தேசம் என்று பெயர் பெற்றுள்ள இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவின் மதிப்பை அங்கீகரிக்க பிரபல பத்திரிகையான நியூயார்க் டைம்ஸ் தவறவில்லை. ஏனென்றால் 2023-ஆம் ஆண்டில் செல்ல வேண்டிய 52 இடங்களின் நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம்பெறுள்ள ஒரே இந்திய மாநிலமாக கேரளா உள்ளது.
இந்தியாவில் இருந்து பட்டியலிடப்பட்ட ஒரே சுற்றுலா தலமாக மட்டுமல்ல ஆண்டுதோறும் பார்வையிட வேண்டிய இடங்களின் பட்டியலில் கேரளா 13-வது இடத்தில் இருப்பதும் பெருமைக்குரிய விஷயமாக இருக்கிறது. கடற்கரைகள், காயல்கள் (backwater lagoons) உணவு வகைகள் உள்ளிட்டவற்றோடு செழுமையான கலாச்சார மரபுகளுக்கு பெயர் பெற்ற தென்னிந்திய மாநிலமாக கேரளா இருப்பதாக நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டு இருக்கிறது. தவிர கேரளாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் நாட்டுப்புற வாழ்க்கையை அனுபவிக்க உதவும் புதுமையான உத்திக்காக கேரளா அரசை நியூயார்க் டைம்ஸ் பாராட்டிவுள்ளது.
குமரகம் மற்றும் மரவந்துருது உட்பட கேரளாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்கள் பற்றியும் நியூயார்க் டைம்ஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கேரளாவிலுள்ள குமரகம் அழகிய உப்பங்கழிகளுக்கு பெயர் பெற்ற ஒரு சிறிய கிராமமாகும். இங்கு சுற்றுலா வருபவர்கள் தென்னை நார் மூலம் கயிறுகளை உருவாக்குதல், கால்வாய்கள் வழியே படகு ஓட்டுதல், பனை மரம் ஏறுதல் போன்ற பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்கலாம்.
தங்கள் மாநிலத்தை உலகளவில் உள்ள சிறந்த டூரிஸ்ட் ஸ்பாட்ஸ்களில் ஒன்றாக நியூயார்க் டைம்ஸ் அங்கீகரித்துள்ள மகிழ்ச்சியை அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில், "கம்யூனிட்டி டூரிஸம் அணுகுமுறைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் இது" என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் " 2023-ஆம் ஆண்டில் உலகளவில் பார்வையிட வேண்டிய 52 இடங்களில் கேரளாவை நியூயார்க் டைம்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது. கம்யூனிட்டி டூரிஸத்திற்கான எங்களின் முன்மாதிரி அணுகுமுறை, கேரளாவின் செழுமையான கலாச்சாரம் மற்றும் அற்புத இடங்களை ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு உதவுகிறது. இது கேரள சுற்றுலாத்துறை நிகழ்த்தியுள்ள மற்றுமொரு அற்புதமான சாதனை" என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
பட்டியலில் லண்டன் தான் முதலிடத்தில் உள்ளது. முன்னதாக TIME இதழால் "2022-ல் பார்க்க வேண்டிய 50 தனித்துவமான இடங்கள்" லிஸ்ட்டில் கேரளா பட்டியலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. கேரளாவின் Aymanam கிராமம், கான்டே நாஸ்ட் டிராவலரால் பார்க்க வேண்டிய முதல் 30 இடங்களில் பட்டியலிடப்பட்டது. அதே நேரத்தில் டிராவல் & லீஷர் பத்திரிகை குளோபல் விஷன் விருதுக்கான மாநிலமாக கேரளாவை தேர்ந்தெடுத்ததும் குறிப்பிடத்தக்கது.