சந்திரோதயா கோவில், பிருந்தாவனம் : உத்தரப் பிரதேசத்தின் மதுராவில் கட்டப்படும் சந்திரோதய கோவில் ஆரம்ப கட்டத்தில் உள்ளது. பெங்களூருவின் இஸ்கான் அமைப்பால் திட்டமிடப்பட்ட இக்கோயில் கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிக உயரமான மத நினைவுச்சின்னமாக மாறுமாம். 700 கோடி ரூபாய் செலவில் 62 ஏக்கர் நிலத்தில் 70 தளங்களுடன் கட்டப்பட்டு வரும் இக்யோயிலின் உயரம் 700 அடி ஆகும். டெல்லியின் குதுப் மினாரை விட மூன்று மடங்கு அதிகமாகும். இக்கோயிலில் 12 ஏக்கர் பார்க்கிங்குக்கு மட்டும் விடப்பட்டுள்ளது.அது மட்டும் இல்லாமல் ஹெலிபேட் வசதியும் உள்ளதாம்
ஓம் ஆசிரமம், பாலி : ஓம் விஸ்வதீப் குருகுலம் சுவாமி மகேஸ்வரானந்தா ஆசிரம கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஒரு பகுதியாகும். ராஜஸ்தானின் பாலி பகுதியில் 250 ஏக்கர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய ஓம் சின்னமாக உருவாக்கப்பட்டு வருகிறது. ஓம் சின்னத்திற்கு நடுவே பிறை நிலவைக் குறிக்கும் ஒரு குளம் உருவாக்கப்படும். 108 அடி உயரத்தில் 12 கோயில்களுடன் 90 அடியில் பெரிய மேல்நிலை நீர்த்தேக்கமும் அதற்கு மேல் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சூரியன் கோயிலும் கட்டப்படும். இதற்காக ஆகும் செலவு 500 கோடிக்கும் மேல் எனப் பேசப்படுகிறது
உமியா மாதா மந்திர், மெஹ்சானா : கடுவ பட்டிதர் சமூகத்தின் தெய்வமான மா உமியாவின் பிரமாண்ட கோவில் குஜராத்தின் மெஹ்சானா பகுதியில் 74000 சதுர அடி நிலத்தில் ரூ.1500 கோடி செலவில் கட்டப்படுகிறது. கோயில் 255 அடி நீளமும் 160 அடி அகலமும் கொண்ட இந்த கோயிலின் கட்டுமானத்தில் ஒரு இரும்பு ஆணி கூட பயன்படுத்தப்படவில்லையாம். உஞ்சாவில் உள்ள பிரதான கோயிலை இயக்கும் ஸ்ரீ உமியா மாதாஜி சன்ஸ்தான் கோயிலைத் தவிர 13 மாடிகள், 400 அறைகளைக் கொண்ட தங்கும் விடுதி வசதியை கட்டவுள்ளது.
திருப்பதி வெங்கடேஸ்வரா கோயில், ஜம்மு : திருப்பதி தேவஸ்தானம் ஜம்முவில் திருப்பதி வெங்கடேஸ்வரா கோவிலின் பிரமாண்டமான பிரதியை கட்டுகிறது. ரூ. 50 கோடி செலவில் மலையடிவாரத்தில் சுமார் 62 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இக்கோயில் சோழர் காலத்து கட்டிடக்கலையுடன் கூடிய திராவிட பாணியை பிரதிபலிக்கும். இத்தகைய கட்டிடக்கலையில் ஜம்முவில் இருக்கப்போகும் முதல் கோவில் இதுவே ஆகும். திருப்பதி உள்ள தெய்வங்களின் அச்சு அசல் போலவே வெங்கடேஸ்வரா, பத்மாவதி மற்றும் ஆண்டாளின் சிலைகள் செய்யப்பட்டு ஜம்முவிற்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
விராட் ராமாயண கோவில், கேசரியா : விராட் ராமாயண கோவில் பீகாரின் கேசரியா பகுதியில் கட்டப்பட்டு கொண்டிருக்கும் இந்து கோவில். இந்த கோவில் தனித்துவமான 33 அடி உயர சிவலிங்கத்தை கொண்டிருக்கும். விராட் ராமாயண கோவிலானது கம்போடியாவில் உள்ள 215 அடி உயரமுள்ள 12 ஆம் நூற்றாண்டின் உலகப் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவில் வளாகத்தின் உயரத்தை விட இரு மடங்காக உயரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரமாண்ட வளாகம் ரூ.500 கோடி செலவில் கடத்தப்பட்டு வருகிறது.
அனுமன் கோவில், கிஷ்கிந்தா : இராமாயணத்தில் வாலிவதம் நிகழும் இடம் தான் கிஷ்கிந்தா. அந்த இடத்தில் உலகின் மிக உயரமான அனுமன் சிலையையும், அவர் பிறந்த இடமாக கருதப்படும் கிஷ்கிந்தாவுக்கு அருகில் உள்ள அஞ்சனாத்ரி பெட்டாவின் அடிவாரத்தில் ரூ.1200 கோடி செலவில் கோயிலையும் கட்டவும் ஹனுமந்த் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை முன்வந்துள்ளது. இந்த பிராமாண்ட கோவிலுக்கு அருகே, ஒரு ராமாயண கிராமமும் உருவாக்கப்படுமாம், அங்கு முழு காவியமும் பொம்மைகள் மூலம் சித்தரிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மகாகால் காரிடர், உஜ்ஜைன் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர்லிங்கத் தலமான மகாகாளேஸ்வரர் கோயில், சிவனை வழிபட பயணிக்கும் யாத்ரீகர்களுக்கான விரிவாக்கப்பட்ட கோயில் வளாகமகா உருவாக்கப்பட்டு வருகிறது. வேதங்களில் கூறப்படும் சிவபெருமானின் புராணக்கதைகளுடன் தொடர்புடைய 192 சிலைகள் 53 சுவரோவியங்கள் 108 முத்திரைகளை இங்கே உருவாக்க உள்ளனர். இதற்கு திட்டமிட்டுள்ள தொகை ரூ.800 கோடிகளாம்.