எப்போதும் நகரத்திலேயே வாழ்ந்தவர்களுக்கு இங்குள்ள பரபரப்பான வாழ்க்கை சூழலில் இருந்து விடுபட்டு சில நாட்களாவது கிராமத்தில் அமைதியான சூழலில் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும். வாகனங்களின் இரைச்சல், அளவுக்கு அதிகமான மக்கள் கூட்டம், மாசுபட்ட காற்று போன்ற பல விஷயங்கள் உடல் அளவிலும் மனதளவிலும் நகரத்தில் உள்ளவரை பாதித்திருக்கும்.இவை அனைத்திலிருந்தும் விடுதலை அடைந்து மனதிற்கும் உடலுக்கும் அமைதி ஆரோக்கியத்தையும் தரும் அழகிய கிராமங்கள் இந்தியா முழுவதும் நிறைந்துள்ளன. இவற்றில் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய ஐந்து கிராமங்களை பற்றி பார்ப்போம்.
மானா கிராமம், இமாச்சல பிரதேசம் : இமாச்சல பிரதேசத்தின் மண்டி மாவட்டத்தில் அமைந்துள்ள மானா என்ற கிராமம் பிரபலமான பெற்ற ஒரு இடமாக உள்ளது. சாகசங்களை விரும்புபவர்களுக்கும், மலைகளின் மீது காதல் கொண்டவர்களுக்கும் இயற்கை அழகை ரசிக்க விரும்புபவர்களுக்கும் ஏற்ற இடமாக இது இருந்து வருகிறது. மேலும் இந்தியாவின் கடைசி கிராமம் என்றும் இது அழைக்கப்படுகிறது. இங்கு மலை ஏற்றத்திற்கும் நீர்வீழ்ச்சிகளுக்கும் குறைவே இல்லை. இங்கிருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் தான் உலக அளவில் புகழ் பெற்ற பத்ரிநாத் கோவில் அமைந்துள்ளது.ரிஷிகேஷ், ஹரித்துவார், டேராடூன்ஆகிய இடங்களில் இருந்து மாணா கிராமத்திற்கு நேரடியாக பேருந்தின் மூலம் பயணம் செய்ய முடியும்.
சிரோ கிராமம், அருணாச்சலப் பிரதேசம் : இந்த சிறிய நகரமானது அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடநகர் நகரில் இருந்து 160 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. பசுமை நிறைந்த காடுகளும், பூக்கள் பூத்துக் குலுங்கும் இடமாக இருக்கும் இது இயற்கை காட்சிகளை விரும்புபவர்களுக்கும் மிக ஏற்றதாக அமையும். அபடணி என்று பழங்குடி மக்கள் இந்த கிராமத்தில் அதிகம் வசித்து வருகின்றனர்.சிரோவில் உள்ள விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து பேருந்து மூலம் சிரோ கிராமத்தை அடைய முடியும்
மாலினாங் கிராமம், மேகாலயா : மேகாலயாவில் உள்ள பழங்குடி கிராமமான மாலினாங் தெற்கு ஷில்லாங்கில் இருந்து 90 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு இந்த கிராமத்திற்கு ஆசியாவிலேயே மிகவும் சுத்தமான கிராமம் என்று விருது வழங்கப்பட்டது. அங்குள்ள உள்ளூர் வாசிகளும், அரசாங்கமும் கிராமத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இங்கு ஆயிரம் வருடம் பழமையான மரத்தின் வேர்களினால் அமைந்த பாலம் ஒன்று மிகவும் பிரசித்தி பெற்றது ஆகும்.ஷில்லாங்கில் உள்ள விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக டாக்ஸிகளின் உதவியுடன் மாலினாங் கிராமத்தை அடைய முடியும்.
கைனாகரி கிராமம், கேரளா : கேரள மாநிலம் கூட்ட நாட்டில் அமைந்துள்ள கைனாகரி என்ற கிராமம், அதன் இயற்கை காட்சிகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்றது. அதிக அளவில் தென்னை மரங்களை கொண்டுள்ள இந்த கிராமத்தில் கிடைக்கும் தேங்காய் மற்றும் இளநீர் மிகுந்த சுவையுடையவனாக இருக்கும். மேலும் இங்கு அதிக மக்கள் படகு சவாரி செய்வதற்காகவே வருகின்றனர். கேரளாவில் உள்ள ஆலப்புழா ரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து பேருந்து மூலமாக கைநகரி கிராமத்தை அடைய முடியும்.
கிம்சர் கிராமம், ராஜஸ்தான் : சுற்றிலும் மணல் மேடுகள் அலங்கரிக்க ராஜஸ்தான் மாநிலத்தில் அமைந்துள்ளது இந்த கிம்சர் கிராமம். அதிகம் போற்றப்பட வேண்டிய ஆனால் இன்று வரை அங்கீகாரம் கிடைக்காத ஒரு கிராமமாக இது இருந்து வருகிறது. பல்வேறு மக்கள் தங்கள் பொழுதை அமைதியாக கழிப்பதற்கு இந்த இடத்தை தேர்ந்தெடுக்கின்றனர். இங்குள்ள கின்சார் கோட்டை நாகூர் கோட்டை ஆகியவை பிரபலமான சுற்றுலா தளங்கள் ஆகும்.வடக்கு ஜோத்பூரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் கின்சர் அமைந்துள்ளது. ஜோத்பூர் விமான நிலையத்தில் இருந்து பேருந்து வாயிலாக நாம் கிசர் கிராமத்தை அடையலாம்.