தற்கால மெஷின் வாழ்வுக்கு மத்தியில் இயற்கையோடு நெருக்கமாக இருக்கவே பலரும் விரும்புகிறார்கள். மலைகள் முதல் மரங்கள் அடர்ந்த காடுகள் வரை இயற்கை அழகு கண்களை பறிக்கும் இடத்திற்கு சுற்றுலா செல்ல மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள். நீங்கள் உள்ளத்தை குளிர வைக்கும் இடங்களுக்கு செல்ல விரும்பும் இயற்கை ஆர்வலரா.! உங்களுக்கென்றே இந்தியாவில் இருக்கும் சில அற்புத இடங்கள் பற்றி இப்போது பார்க்கலாம்.
யும்தாங் பள்ளத்தாக்கு (Yumthang Valley):
சிக்கிம் மாநிலத்தில் உள்ள இது மலர்களின் பள்ளத்தாக்கு என்று குறிப்பிடப்படுகிறது. வடக்கு சிக்கிம் பகுதியில் காணப்படும் இவ்விடம் ஓர் இயற்கை சரணாலயம் ஆகும். யும்தாங் பள்ளத்தாக்கு கண்களுக்கு விருந்தளிக்க கூடியது. இம்மாநிலத்திற்கே உரிய சிறப்புவகை மரமான ரோடோடெண்ட்ரான் மரம் 24 வகைகளில் இங்குள்ளன. பிப்ரவரி - ஜூன் நடுப்பகுதி வரை இங்கு பூக்கும் காலமாகும். அந்த சமயத்தில் எண்ணற்ற மலர்கள் வண்ணமயமாகப் பூத்துக் குலுங்கி இந்த பள்ளத்தாக்கையே, வானவில் போன்ற கம்பளத்தால் அலங்கரிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
சிரபுஞ்சி:
மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சி (தற்போது சோஹ்ரா) மிக அழகான இடங்களில் ஒன்றாகும். சிறு வயதிலேயே நாம் கேள்விப்பட்டிருக்கிறோமே. இங்கு அதிக மழை பெய்யும் என்று. எனவே இங்கு பல அழகிய நீர்வீழ்ச்சிகள் உள்ளன. எனினும் Nohkalikai நீர்வீழ்ச்சி மிகவும் பிரபலமானது. சிரபுஞ்சியில் இருந்து 24 கிமீ தொலைவிலும், ஷில்லாங்கில் இருந்து 30 கிமீ தொலைவிலும், மேகாலயாவில் ஷில்லாங் - சிரபுஞ்சி சாலையில் அமைந்துள்ள மவ்க்டாக் டிம்பெப் பள்ளத்தாக்கு ஒரு அற்புதமான வியூபாயிண்ட் ஆகும்.
மலர் பள்ளத்தாக்கு தேசியப் பூங்கா (Valley of Flowers National Park):
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த பார்க், இந்தியாவின் சின்னமான இயற்கை இடங்களில் ஒன்றாகும். சிறந்த இயற்கை அழகு நிறைந்த மலர்களை இப்பூங்கா கொண்டுள்து. இங்கே பல வகை கரடிகள், பனி சிறுத்தைகள், பழுப்பு கரடிகள் மற்றும் நீல ஆடுகள் உட்பட பல அரிய விலங்குகளை காணலாம். காட்டு பூக்கள் நிறைந்த புல்வெளிகளுக்கு இது மிகவும் பிரபலமான இடமாகும்.
சூக்கோ பள்ளத்தாக்கு (Dzukou Valley):
இந்த பள்ளத்தாக்கு இந்திய மாநிலங்களான நாகாலாந்து, மணிப்பூர் ஆகியவற்றின் எல்லையில் அமைந்துள்ளது. மேலும் இது மிகவும் பிரபலமான மலையேற்ற இடமாகும். இயற்கை ஆர்வலர்கள் தேடும் அனைத்தையும் இந்த இடம் பெற்றுள்ளது. இங்கு பெறும் மலையேற்ற அனுபவம் சுவாரஸ்யம் நிறைந்ததாக இருக்கும்.
சட்டல் - பீம்டல்:
சட்டல் மற்றும் பீம்டல் ஆகிய 2 இயற்கை அழகு கொஞ்சும் இடங்களும் உத்தராகண்ட் மாநிலத்தில் அருகருகே அமைந்து உள்ளன. சட்டல் காடுகள் பறவைகளுக்கு பிரபலமானது என்றால், பீம்டல் வண்ணத்துப்பூச்சிகளின் புகலிடமாக இருப்பதால் பிரபலமாக உள்ளது. இவ்விரண்டு இடங்களும் நைனிடால் மாவட்டத்தில் அமைந்துள்ளன.
எரவிகுளம் தேசிய பூங்கா:
இடுக்கி மற்றும் எர்ணாகுளம் மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது எரவிகுளம் தேசிய பூங்கா. இந்த பூங்கா பர்பிள் பியூட்டி என்று குறிப்பிடப்படுகிறது. இங்கு நீங்கள் பார்க்கும் நீலக்குறிஞ்சி பூக்களின் வயல்கள் உங்கள் விடுமுறையை நீண்ட காலமாக நினைவில் வைத்திருக்க வைக்கும். இந்த பூங்கா கண்களுக்கு பெரிய விருந்தாக அமையும்.