ஸ்ரீ ராமர் - ஜானகி யாத்திரையை மையமாகக் கொண்டு, பாரத் கௌரவ் டீலக்ஸ் சுற்றுலா ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தது. இந்துக்களின் புனிதம் மிகுந்த இடங்களாக உள்ள அயோத்தி மற்றும் நேபாளத்தில் உள்ள ஜனாக்பூர் ஆகிய இடங்களுக்கு செல்லும் வகையில் இந்தப் பயணத் திட்டம் அமைந்துள்ளது.இந்த சுற்றுலாவின்போது நந்திகிராம், சீதாமார்ஹி, காசி, பிரயாக்ராஜ் போன்ற இடங்களிலும் தரிசனம் செய்யலாம்.
சுற்றுலா விவரம் : இந்த சுற்றுலாவில் பங்கேற்கும் பயணிகள் இரண்டு நாட்கள் ஹோட்டலில் தங்க வைக்கப்படுவார்கள். ஜானக்பூரில் ஒரு நாளும், காசியில் ஒரு நாளும் தங்க வேண்டியிருக்கும். இந்த சமயத்தில் அயோத்தியா, சிதீமார்ஹி, பிரயாக்ராஜ் போன்ற இடங்கள் சுற்றி காண்பிக்கப்படும். இந்த சேவைகளை ஐஆர்சிடிசி கவனித்துக் கொள்ளும்.
பயண வழித்தட விவரம் : அயோத்தியாவில் இருந்து புறப்படும் ரயிலானது பீகாரில் உள்ள சீதாமார்ஹி நோக்கி செல்லும். பின்னர் அங்கிருந்து பயணிகள் ஜானக்பூருக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். சீதாமார்ஹி ரயில் நிலையத்தில் இருந்து 70 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த இடத்துக்கான பயணம் பேருந்துகள் மூலமாக ஒருங்கிணைக்கப்படும்.
பின்னர் இங்கிருந்து ரயில் காசிக்கு புறப்படும். அங்கு சாரணாத், காசி விஸ்வநாதர் கோவில், துளசி கோவில் போன்ற இடங்களில் வழிபாடு நடத்தலாம். இதையடுத்து, காசியில் இருந்து பிரயாக்ராஜுக்கு பேருந்து மூலமாக பயணம் ஒருங்கிணைக்கப்படும். அங்கு திரிவேனி சங்கமம், அனுமன் கோவில், பரத்வாஜ் ஆசிரமம் போன்றவற்றை பார்வையிடலாம். பின்னர் இந்த ரயில் டெல்லிக்கு திரும்பிவிடும்.
ரயில் வசதி மற்றும் கட்டணம் : பாரத் கவுரவ் ரயிலில் முதல் ஏசி, இரண்டாம் வகுப்பு ஏசி என இரண்டு வகையான பெட்டிகள் இருக்கும். இரண்டு ரெஸ்டாரண்ட்கள், மாடர்ன் சமையல் அறை, சிசிடிவி கேமரா, பாதுகாவலர்கள் போன்ற வசதிகள் உண்டு. இந்த சுற்றுலா செல்ல விரும்பும் பட்சத்தில் ஒரு நபருக்கு தலா ரூ.39,775 என்ற அளவில் கட்டணம் தொடங்குகிறது. 7 நாட்கள் கொண்ட பயணத்தில் சைவ உணவுகள் வழங்கப்படும்.