யுனெஸ்கோவின் World Heritage Site-ஆல் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட, புகழ்பெற்ற இந்திய நினைவு சின்னங்களில் அழகான தாஜ்மஹால், புனித பொற்கோயில் மற்றும் கலாச்சார தளமான ஹவா மஹால் உள்ளிட்ட பல நினைவு சின்னங்கள் அடங்கும். இந்தியாவில் உள்ள கட்டாயம் பார்க்க வேண்டிய வரலாற்று நினைவு சின்னங்களின் டாப் பட்டியலை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.நம்மை பெருமைப்படுத்தும் இந்தியாவின் கண்கவர் நினைவு சின்னங்கள் கீழே..
தாஜ்மஹால் (ஆக்ரா) : உலகின் ஏழு அதிசியங்களில் ஒன்றாக இடம்பெற்றுள்ளது இந்தியாவின் ஆக்ராவில் இருக்கும் தாஜ்மஹால். உலகின் மிக அழகான நினைவு சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. அழகான மற்றும் பிரபலமான கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் இந்த வெள்ளை பளிங்கு நினைவுச்சின்னம் முகலாய பேரரசர் ஷாஜஹானால் தனது அன்பு மனைவியின் நினைவாக கட்டப்பட்டது.
குதுப்மினார் (டெல்லி) : இது கிபி 1199-ஆம் ஆண்டை சேர்ந்த உலகின் மிக உயரமான செங்கல் மினாரெட் குதுப்மினார் ஆகும். 72.5 மீட்டர் உயரத்தில் சுமார் 379 படிக்கட்டுகள் கொண்ட இந்த புகழ்பெற்ற நினைவுச்சின்னம் இந்தியாவின் வளமான கட்டிடக்கலையை பிரதிபலிக்கிறது. இந்த கோபுரம் இந்தியாவின் மிக உயரமான கோபுரமாகும். 5 மாடிகள் கொண்ட குதுப்மினாரின் முதல் மூன்று மாடிகள் சிவப்பு மணற்கற்களாலும், கடைசி இரண்டு பளிங்கு மற்றும் மணற்கற்களாலும் கட்டப்பட்டுள்ளன.
சாஞ்சி ஸ்தூபி (மத்திய பிரதேசம்): மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் ராய்சென் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய ஊர் சாஞ்சி. சாஞ்சியில் உள்ள பெரிய ஸ்தூபி பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது. புத்த மதத்தை தழுவிய அசோகர் புத்தரின் தத்துவங்களை பாதுகாக்க மற்றும் பரப்ப பல முயற்சிகளை மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக சாஞ்சி ஸ்தூபியை நிறுவினார். பின்னாளில் வந்த அரசர்களால் சாஞ்சியில் நிறைய ஸ்தூபிகள் கட்டமைக்கப்பட்டாலும், பேரரசர் அசோகரால் கட்டப்பட்ட முதல் ஸ்தூபி பிரம்மாண்டமானது. 215 அடி உயரமுள்ள குன்றின மேல் அரைக்கோள வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
சார்மினார் (ஹைதராபாத்) : பிரபலமான மற்றும் கம்பீரமான நினைவு சின்னமாக இருக்கிறது சார்மினார். 1591-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அற்புதமான மசூதி நான்கு மினாரட்டுகளைக் கொண்டுள்ளது. பிளேக் நோய் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டதற்கான அடையாளமாக, அதனை கொண்டாடும் பொருட்டு முகமது குலி குப் ஷா என்பவரால் இது கட்டப்பட்டது.
விக்டோரியா மெமோரியல் (கொல்கத்தா) : மத்திய கொல்கத்தாவில் உள்ள மைதானத்தில் உள்ள ஒரு பெரிய பளிங்கு கட்டிடம் விக்டோரியா மெமோரியல். விக்டோரியா மகாராணியின் நினைவாக உருவாக்கப்பட்ட விக்டோரியா மெமோரியலான இந்த கட்டிடம் 1906 - 1921-க்கு இடையில் கட்டப்பட்டது. விக்டோரியா மெமோரியல் ஹாலின் உயரம் 184 அடி ஆகும்.