உலகிலேயே மிக்பபெரிய ரயில் போக்குவரத்துகளில் இந்திய ரயில்வேயும் ஒன்று. ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கோ, இன்னொரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்கோ அதிக செலவு இல்லாமல் செல்ல வேண்டுமென்றால் அதற்கு ரயில் பயணம் தான் சிறந்தது. இது கார், விமானத்தை விட சௌகர்யமானது என்றால் மிகையல்ல. ஜன்னலோர சீட்டில் உட்கார்ந்து கொண்டு, தின்பண்டங்களை சாப்பிட்டவாறே பசுமையான வயல்வெளிகள், அழகான சிறிய கிராமங்கள், நகர கட்டிடங்கள், பனி மூடிய மலைகள் என அனைத்தையும் ரயில் பயணத்தில் காணலாம். இந்தியாவில் நீங்கள் கட்டாயம் செல்ல வேண்டிய ரயில் பாதைகளின் பட்டியலை நாங்கள் தருகிறோம். உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அணுபவத்தை பெற உடனே கிளம்புங்கள்.
மண்டபம் – ராமேஸ்வரம்: தென்னிந்தியாவிற்கு சுற்றுலா சென்றீர்கள் என்றால், தமிழ்நாட்டின் ராமேஸ்வரத் தீவிலிருந்து மண்டபம் வரையிலான ரயில் பயணத்தை தவற விட்டுவிடாதீர்கள். இந்தியாவின் நீளமான பாலங்களில் ஒன்றான இதில் ரயில் பயணம் செய்வது உங்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும். கடலின் நடுவே இருக்கும் பாலத்தின் இருபுறமும் நம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீல வண்ணத்தில் கடலும் வானமும் கைகோர்த்து இருக்கும் காட்சி அவ்வுளவு ரம்மியமாக இருக்கும். கடல் அலையும் கடுமையாக வீசும் காற்றும் சில சமயங்களில் ரயில் பயணத்தில் தடங்கலை ஏற்படுத்தலாம். ஆகையால்தான் இதை உலகின் ஆபத்தான ரயில் பயணங்களில் ஒன்றாக கூறுகிறார்கள்.
ஊட்டி மலை ரயில் (மேட்டுப்பாளையம் - ஊட்டி): 1908ம் ஆண்டு பிரிட்டிஷாரால் தொடங்கப்பட்ட இந்த ரயில் சேவை இன்று வரை மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது வரை இந்த பாசஞ்சர் ரயில் நீராவி இஞ்சின் கொண்டே இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் அமர்ந்து பயணம் செய்யும் போது பல குகைகள், வளைவுகள், யூகலிப்டஸ் தோட்டங்கள், தேவதாறு, கருவேலமரங்கள் ஆகியவற்றைக் கடந்து மலை பாதை வழியாக செல்வது உங்களுக்கு ஒரு புதிய அணுபவத்தை கொடுக்கும். அதிகபட்சமாக 8.33 சதவிகிதம் சாய்ந்து, அசியாவிலேயே மிகவும் செங்குத்தான ரயில் பாதை என்ற பெயரை இந்த ரயில் பாதை பெற்றுள்ளது. இந்த ரயில் பாதையை உலக பாரம்பரிய பகுதியாக யுனெஸ்கோ அமைப்பு 2005ம் ஆண்டு அறிவித்தது.
மதீரான் - நீரல்: மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மதீரான் – நீரல் ஊர்களுக்கு இடையே செல்லும் இந்த குறுகிய ரயில் பாதையை, இந்தியாவின் மிகச்சிறந்த ரயில் பாதையாக கூறலாம். மேற்கு தொடர்ச்சி மலையின் கரடுமுரடான நிலப்பரப்பில் இந்த ரயில் பயணம் செய்கிறது. மொத்தமே 20கிமீ தூரமே கொண்ட இந்த ரயில் பயணம் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.
டார்ஜலிங் இமாலய ரயில்வே: மேற்கு வங்காளத்தின் நியூ ஜல்பாய்குரி ஊரிலிருந்து டார்ஜலிங் வரை செல்கிறது டார்ஜலிங் இமாலய ரயில். இந்த இருப்பு பாதை வெறும் 2 அடி மட்டுமே அகலம் கொண்டது. 88கிமீ தூரத்திற்குச் செல்லும் இந்த ரயில், பல அழகான மலைகளை கடந்து செல்கிறது. இந்த ரயிலில் பயணம் செய்தால் கஞ்சஞ்சங்கா மற்றும் எவரெஸ்ட் சிகரத்தை காணும் பாக்கியத்தை பெறலாம்.
இமாலய அரசி: 1903ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் முதல்முறையாக கல்காவிலிருந்து ஷிம்லா வரை இந்த ரயில் இயக்கப்பட்டது. 96கிமீ பயண தூரத்தை அடைய இந்த ரயில் 5 மணி நேரம் எடுத்துக் கொண்டது. இந்த ரயில் பயணத்தில் 11 ரயில் நிலையங்கள், 800 பாலங்கள், 103 குகைகள் மற்றும் எண்ணற்ற வளைவுகளை நீங்கள் கண்டு ரசிப்பீர்கள். இந்த ரயிலில் ஷிம்லா செல்லும் வரை உங்கள் கண்களுக்கு விருந்தளிக்க கூடிய பல இடங்களை காண்பீர்கள். நிச்சியம் இந்தப் பயணம் உங்களுக்கு மறக்க முடியாததாக இருக்கும்.