இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பின் கடைக்கோடிகளை பற்றி நினைத்திருக்கிறீர்களா? வடகோடி நிலம் எது, தென்கோடி நிலம் எது என்று?கூகுள் மேப்பை திறந்து வடகோடியில் உள்ள, மக்கள் வாழத் தகுந்த இடம் என்ன என்று தேடிப்பாருங்கள், பனி போர்வை போர்த்திய லாங் இயர் பியன் என்ற ஒரு நார்வே நகரத்தை கைகாட்டும். இந்த பூமியில் மக்கள் வாழும் வடகோடி முனை அதுதான்.
இதற்கு மேலே ஸ்வால்பார்டில், நை ஆலேசன்ட் போன்ற சில இடங்கள் உள்ளன. ஆனால் அவை முற்றிலும் ஆராய்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அங்கே குடியிருப்பதில்லை. லாங்இயர்பியன் நகரத்திலிருந்து வடமேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் ஸ்வால்பார்ட் விமான நிலையம் (LYR) அமைந்துள்ளது. உலகின் வடகோடி விமான நிலையம் இதுதான்.
இந்த நகரம் 1906 ஆம் ஆண்டில் அமெரிக்க ஜான் முன்ரோ லாங்யாரால் நிறுவப்பட்டது . பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் ஒரு நோர்வே நிலக்கரி நிறுவனத்திற்கு இந்த இடத்தை விற்றார். லாங்யாரால் என்பவர் நிறுவியதால் அவரின் நினைவாக இந்த இடத்திற்கு லாங்கியர்பைன் என்று பெயரிட்டனர். நோர்வே மொழியில் இந்த இடத்திற்கு லாங் இயர் பியென் என்று பெயர் .
வட கோடியில் இருக்கிறதே ..இங்கு இணைய வசதி இருக்காதோ என்று நினைக்க வேண்டாம். இங்கு மொபைல் நெட்வொர்க் சிறப்பாக கிடைக்கும். அதே போல இங்கு வாங்கும் பொருட்களுக்கு வரி எதுவும் கிடையாதாம். ஆனால் மதுவுக்கு கட்டுப்பாடு உண்டு. மாதத்திற்கு ஒரு லிட்டர் மது மற்றும் 24 பீர் கேன்கள் மட்டுமே வாங்க அனுமதிக்கப்படுகிறார்கள்.