தென்னிந்தியாவில் வெப்பம் குறைவாக இருக்கும் கோடை கால சுற்றுலா தளங்கள் நிறைந்த இடம் என்றால் கேரளாவை சொல்லலாம். சுவையான உணவு, வளமான கலாச்சாரம், பரந்து விரிந்த மலைவாசஸ்தலங்கள், உப்பங்கழிகள் , படகு இல்லங்கள் உள்ளிட்ட இடங்கள் கேரளாவிற்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. இந்த கோடை விடுமுறையில் கேரளாவில் பார்க்க வேண்டிய இடங்களை உங்களுக்கு சொல்கிறோம்.
அரபிக்கடலின் கரையில் அமைந்து இருப்பதால் இந்த இடத்தில் இருந்து சூரிய உதயத்தை பார்க்கமுடியாது. ஆனால் கடலில் மூழ்கும் நெருப்பு பிழம்பு போன்ற சூரிய அஸ்தமனத்தை பார்க்கலாம். வர்கலா, கோவளம், கோழிக்கோடு, மராரி மற்றும் ஆலப்புழா ஆகியவை சிறந்த சன்செட் ஸ்பாட்களாகும். அதுவும் வர்கலா கடல் பகுதியில் இப்போது டால்பின்கள் வருகை தந்திருப்பதால் அது கடலில் துள்ளி குதிக்கும் காட்சிகளை மிஸ் செய்து விடாதீர்கள்.
கேரளாவின் பெரும்பாலான மலைகள் தேயிலை தோட்டங்களால் மூடப்பட்டிருக்கும். அதோடு பல நீர்வீழ்ச்சிகள், வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் ஏரிகளைக் கொண்டுள்ளது. தமிக்க எல்லை பகுதிகளில் இருந்து பக்கத்திலேயே இருக்கும் மூணாறு, வயநாடு, தேக்கடி, இடுக்கி, வாகமன், சைலண்ட் வேலி மற்றும் அதிரப்பிள்ளி போன்ற இடங்கள் எல்லாம் உங்கள் வரவுக்கு காத்துகொண்டு இருக்கின்றனர்.
மலைகள் சூழ்ந்த பகுதிகள் கூடவே சாகசங்களும் இருக்க தானே செய்யும். அப்படி கேரளாவின் மலை பகுதிகளில் பாராகிளைடிங், மலை ஏறுதல், பாறைகளில் ஏறுதல், மூங்கில் ராஃப்டிங், ஸ்நோர்க்லிங், ஸ்குபா டைவிங் போன்ற சாகச விளையாட்டுகளும் உள்ளன. எந்த மலை பகுதிக்கு செல்கிறீர்களா அங்கே உள்ள சாகச விளையாட்டுகளையும் குறித்துக்கொள்ளுங்கள்.
கேரளப் பயணத்தை நீங்கள் மகிழ்ச்சியாகக் கழிக்க விரும்பினால், அதில் முக்கியமாக இருக்க வேண்டியது இங்குள்ள உப்பங்கழியில் படகுப் பயணம் தான். நாட்டின் அதிகப்படியான பேக்வாட்டர் என்று சொல்லப்படும் உப்பங்கழிகளில் ஒரு படகு இல்லத்தை வாடகைக்கு எடுத்து அதில் தங்கி , பயணித்துக்கொண்டே ஊரை ரசிப்பது தனி அனுபவம். படகு பயணத்தின் போது, சுற்றியுள்ள நெல் வயல்களையும், வனவிலங்குகளையும், இயற்கை சூழலையும் ரசிக்கலாம்.
அதேபோல கேரளா உணவுகள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்பம், புட்டு- கடலக்கறி, இடியாப்பம் இங்கு மிகவும் பிரபலமானவை. இங்குள்ள அசைவ உணவுகள் கரிமீன் பொலிச்சது, மீன் மாங்கா கறி, கோஜி பொரிச்சது எல்லாம் நிச்சயம் ட்ரை பண்ண வேண்டியது. இது தவிர பத்திரி, எரிச்சேரி, ஓலன், உள்ளி தேய்த்தல், வெள்ளரிக்காய் கிச்சடி போன்ற சைவ உணவுகளும் பலா பாயசம், சட்டி பத்திரி, அடப்ரதமன் போன்ற சில சுவையான இனிப்பு வகைகளை சுவைப்பதற்காகவே கண்டிப்பாக கேரளாவுக்குச் செல்லலாம்.