28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களைக் கொண்ட மிகப் பெரிய நாடு இந்தியா . ஒவ்வொரு மாநிலமும் தனித்த சிறப்புகளையும், அழகையும் கொண்டுள்ளன. வடக்கில் இருந்து தெற்கு வரை, கிழக்கில் இருந்து மேற்கு வரை பரந்து விரிந்த சுற்றுலாத் தளங்கள் ஏராளமாக உள்ளன. உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்திய பகுதிகளை சுற்றிப் பார்க்க வருகின்றனர்.
நீங்கள் நினைப்பதைப் போல இந்தியாவின் அனைத்து இடங்களையும் சுலபமாகப் பார்த்து விட முடியாது. நாட்டின் ஒரு சில இடங்களை நேரடியாக பார்த்துவிட அனுமதி கிடைக்காது. பாதுகாப்பு, அச்சுறுத்தல் , தேசிய இறையாண்மை போன்றவற்றை பாதுகாக்க அந்த இடங்களுக்கு வரும் பார்வையாளர்கள் முன்னமே அனுமதிக்கு பெற வேண்டும். அவை என்னென்ன பகுதிகள் என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.
லட்சத்தீவுகள் : லட்சத்தீவுகள் என்பது மிக அழகான தீவுப் பகுதியாகும். இங்கு விவரிக்க முடியாத அமைதி மற்றும் இயற்கை பேரழகு ஆகியவை நிலை கொண்டுள்ளது. பல விதமான பறவைகள் மற்றும் வனவாழ் உயிரினங்களை இங்கு நீங்கள் பார்க்க முடியும். என்னதான் அழகாக இருந்தாலும், இங்கு அவ்வளவு எளிதில் நீங்கள் நுழைந்துவிட முடியாது. அங்குள்ள யூனியன் பிரதேச அரசிடம் அனுமதி பெற்ற பிறகே நீங்கள் அங்கு செல்ல முடியும்.
நாகாலாந்து : ரம்மியமான இயற்கை அழகு மற்றும் பெருமூச்சுவிட வைக்கும் இயற்கை அதிசயங்கள் மற்றும் எண்ணற்ற ஆச்சரியங்கள் நிறைந்தவை நாகாலந்து ஆகும். இங்கு சென்று பார்வையிடுவதற்கு கோஹிமா, திமாபூர், புது டெல்லி, மோகோசங்க், ஷில்லாங் மற்றும் கொல்கத்தா ஆகிய பகுதிகளில் உள்ள துணைத் தூதர்களிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும். இன்டர்நெட் வழியாகவும் பெர்மிட் பெற முடியும்.
அருணாசலப் பிரதேசம் : விடுமுறையை கழிப்பதற்கு ஆகச் சிறந்த இடமாக அருணாசலப் பிரதேசம் இருக்கிறது. வானளாவிய மலைகள், கண்கொள்ளா அழகுடன் ஏரிகள் போன்ற இயற்கை அழகு இங்கு நிறைந்துள்ளது. எனினும், இந்த மாநிலமானது சீனா, பூட்டான், மியான்மர் ஆகிய அண்டை நாடுகளின் எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்திருப்பதால் இங்கு செல்வதற்கு முன் அனுமதி தேவையாகும்.
மிசோரம் : இயற்கையை நேசிப்பவர்களின் சொர்க்க பூமியாக மிஸோரம் இருக்கிறது. இங்கு கண்டு ரசிப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இந்தியாவில் உள்ள மிகச் சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் 5ஆம் இடத்தில் உள்ளது. வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளின் எல்லையை ஒட்டி அமைந்திருப்பதால் இங்கு செல்வதற்கு அனுமதி தேவையாகும். விமானம் வழியாக வந்தாலும் விமான நிலையத்தில் நீங்கள் பர்மிட் பெற்றுக் கொள்ளலாம்.
சிக்கிம் மாநிலத்தில் சில பகுதிகள் : வடகிழக்கு இந்தியாவில் அமைந்துள்ள அழகிய மாநிலம் சிக்கிம் ஆகும். நிச்சயமாக கண்களுக்கு விருந்து படைக்கும் காட்சிகள் இங்கு ஏராளம் உண்டு. எனினும் இங்குள்ள பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மற்றும் உயரமான மலைகளுக்கு செல்வதற்கு நீங்கள் அனுமதி பெற வேண்டும். விமான நிலையம் மற்றும் சோதனை சாவடிகள் போன்ற இடங்களில் அனுமதி பெற்று கொள்ளலாம்.