இந்தியாவில் பல மாநிலங்கள் எக்கோடூரிசத்தில் (Ecotourism) முன்னோடியாக உள்ளன.அந்த மாநிலங்களை பற்றி பார்ப்பதற்கு Ecotourism என்பதன் அர்த்தத்தையும், அது ஏன் மிகவும் முக்கியமானது என்பதையும் தெரிந்து கொள்வது அவசியம். சூழலியல் சுற்றுலா அதாவது எக்கோடூரிசம் என்பது பொறுப்பான பயணத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில் இயற்கை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பில் அக்கறை கொண்டது.
இயற்கையான எதையும் அழிக்காமல் அல்லது பாதிப்புகளை ஏற்படுத்தாமல் ஒரு இடத்தை சுற்றுலா தளமாக பயன்படுத்துவதே சூழலியல் சுற்றுலா. இயற்கையான பாதுகாப்பு உயிரியல் சூழல் கொண்ட பழங்கால பண்பு கெடாதவாறு, அப்பகுதியில் வாழும் உள்ளூர் மக்களின் உதவியோடும், பொருளாதார வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டும் நடத்தப்படும் சுற்றுலா தளங்களை இந்த டூரிசம் குறிக்கும். இதற்கு உதாரணம் இயற்கை சூழ்நிலையில் உள்ள அமேசான் மழைக்காடுகள், நமது தமிழகத்தின் பிச்சாவரம் உள்ளிட்டவற்றை கூறலாம்.
Ecotourism என்பதில் சுற்றுலா நோக்கம் இருந்தாலும் அப்பகுதியின் இயற்கைப் பாதுகாப்பு மிகவும் முக்கியதுவம் வாய்ந்ததாக எடுத்து கொள்ளப்படுகிறது. இயற்கையை பாதுகாக்கும் அதே வேளையில், அதிகம் அறியப்படாத இடங்களை ஆராய மற்றும் அந்த இடத்தின் வளமான கலாச்சாரம் மற்றும் மரபுகளை புரிந்து கொள்ள எக்கோடூரிசம் சிறந்த வழியாக உள்ளது. இந்தியாவில் சூழலியல் சுற்றுலா ஊக்குவிக்கும் மற்றும் முன்னோடியாக இருக்கும் மாநிலங்களின் பட்டியல்:
உத்தராகண்ட்:
உத்தராகண்ட் சுற்றுலாவின் முக்கிய பகுதியாக எக்கோடூரிசம் மாறியுள்ளது. இந்த மாநிலம் சில நம்பமுடியாத ஹோம்ஸ்டேக்கள் மற்றும் இயற்கை அனைத்தையும் ஊக்குவிக்கும் சுற்றுச்சூழல் வளாகங்களால் நிரம்பியுள்ளது. தவிர இந்த மாநிலம் பூக்களின் பள்ளத்தாக்கு மற்றும் நந்தா தேவி தேசியப் பூங்கா போன்ற பல்லுயிர் மையங்கள் போன்றவற்றால் பயணிகளை ஈர்க்கிறது.
இமாச்சலப் பிரதேசம்:
நாட்டின் மலை மாநிலமான இமாச்சல், பல்லுயிர் வளத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்கும் நோக்கில் செயல்படும் சுற்றுச்சூழல் சுற்றுலா சங்கங்கள் இங்கு பல உள்ளன. கிரேட் ஹிமாலயன் தேசியப் பூங்கா, ஊசி பள்ளத்தாக்கு தேசிய பூங்கா மற்றும் சந்திராதால் ஏரி உள்ளிட்டவை இங்குள்ள சூழலியல் சுற்றுலா பயணிகளுக்கான முக்கிய இடங்களாகும்.
அருணாச்சல பிரதேசம்:
பலதரப்பட்ட நில பரப்புகளை கொண்ட மாநிலமாக உள்ள அருணாச்சலப் பிரதேசத்தில் இன்னும் அதிக மக்கள் செல்லாத மற்றும் ஆராயப்படாத பல இடங்கள் உள்ளன. சுற்றுச்சூழலைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செயல்படும் பல அமைப்புகள் உள்ளன. நம்தாபா தேசியப் பூங்கா, சாங்கா சமூகப் பாதுகாப்பு காப்பகம் ஆகியவை சூழலியல் சுற்றுலா பயணிகளால் இம்மாநிலத்தில் அதிகம் பார்வையிடப்பட்டு வரும் இடங்களாகும்.
அசாம்:
காசிரங்கா தேசிய பூங்கா, மனாஸ் தேசிய பூங்கா மற்றும் போபிடோரா வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட சில பிரபலமான பூங்காக்கள் இந்த மாநிலத்தில் உள்ளன். மேலும் இந்த மாநிலமானது பழங்கால பழங்குடியினர் மற்றும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத அவர்களின் பண்டைய வாழ்க்கை முறை பற்றி சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த முறையில் தெரியப்படுத்தி வருகிறது.
கர்நாடகா:
நம் அண்டை மாநிலமான கர்நாடகா மேற்குத் தொடர்ச்சி மலையின் சுற்றுச்சூழல் பாதைகள் மற்றும் மழைக்காடுகளை உள்ளடக்கியது. இம்மாநிலம் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது மற்றும் பல்லுயிர் பெருக்கத்திற்கான ஒரு ஹாட்ஸ்பாட் ஆகும். நாகர்ஹோலே, கபினி, ஹாசன் மற்றும் சிக்மகளூர் உள்ளிட்ட இடங்கள்இயற்கை ஆர்வலர்களுக்கு பொருத்தமானவை.
சிக்கிம்:
வடகிழக்கு மாநிலமான சிக்கிம் இயற்கையை பாதுகாக்க மற்றும் மேம்படுத்த தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. பிளாஸ்டிக்கை தடை செய்வதில் இருந்து மூங்கில் பாட்டில்களை அறிமுகப்படுத்துவது வரை சுற்றுசூழல் நட்பு மாநிலமாகே சிக்கிம் இருக்கிறது. சிக்கிமில் மேனம் வனவிலங்கு சரணாலயம், காங்சென்ட்ஜோங்கா தேசிய பூங்கா உள்ளிட்டவை சூழலியல் சுற்றுலா பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்.
கேரளா:
நாட்டில் திட்டமிடப்பட்ட எக்கோடூரிசமை செயல்படுத்தும் முதல் மாநிலம் கேரளா. இங்குள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகள் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த இடங்களில் ஒன்றாக உள்ளது. இந்த மலைத்தொடர்கள் உலகின் முதல் 18 பல்லுயிர் மையங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற உப்பங்கழிகள் முதல் மலைப்பகுதிகள் வரை பலவற்றை உள்ளடக்கிய கேரள மாநிலம் ஒரு சிறந்த சூழியல் சுற்றுலா தலமாக உள்ளது.