இந்தியா பரந்து விரிந்த பன்முகத்தன்மை கொண்ட நாடு. எனவே, தான் வருடத்தில் 365 நாட்களும் எக்கச் சக்கமான வெளிநாட்டு பயணிகள் இந்தியாவை சுற்றிப்பார்க்க வருகிறார்கள். இந்தியாவில் சுற்றிப்பார்க்க நிறைய இடங்கள் இருந்தாலும், கோடைக்காலத்தில் சில இடங்கள் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக கருதப்படுவதில்லை. கோடைக்காலத்தில் குடும்பத்தினருடன் சுற்றுலா செல்ல திட்டமிடும் போது, சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், கோடைக்காலத்தில் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டிய இடங்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய இளைஞர்கள் பலரின் கனவு, கோவாவுக்கு சுற்றுலா செல்வது. பிரமிக்க வைக்கும் கடற்கரைகள், அழகான நிலப்பரப்புகள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், கோடை காலத்தில் வழக்கத்தை விட இரு மடங்கு வெப்பம் அதிகமாகவே இருக்கும். கோடைக்காலத்தில் காணப்படும் வெப்பத்தால், கடற்கரை அழகைகூட உங்களால் முழுமையாக ரசிக்க முடியாது. எனவே, ஏப்ரல் முதல் ஜூன் தொடக்கம் வரை கோவா செல்வதை தவிர்ப்பது நல்லது.
ஏழு அதிசயங்களில் ஒன்று தாஜ்மஹால். காதல் சின்னமான தாஜ்மஹாலை காண ஆண்டு முழுக்க கோடிக்கணக்கில் மக்கள் வருகின்றனர். ஆனால், கோடைக்காலம் தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க சிறந்த காலம் கிடையாது. ஏனென்றால், ஏப்ரல் முதல் ஜூலை வரை வெப்பநிலை மற்றும் வெப்ப காற்று அதிகமாக இருக்கும். எனவே, இந்த காலகட்டங்களில் அங்கு செல்வது பெரும் சவாலாக இருக்கும்.
இந்தியாவின் தங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெயசல்மர் (Jaisalmer) பிரமிக்க வைக்கம் மஞ்சள் நிற மணல் பரப்புகளை கொண்ட அழகான இடம். இங்கிருக்கும் மணல் திட்டுக்கள் கண்களுக்கு விருந்தாக இருந்தாலும், கோடைக்காலத்தில் 42 டிகிரி வரை கொளுத்தும் வெயிலால், நெருப்பு பூமியாக காணப்படும். இதனால், நீங்கள் அசெளகரியத்தை உணர்வீர்கள். எனவே, ஜூன் வரை இங்கு செல்லும் திட்டம் இருந்தால் அந்த திட்டத்தை கைவிடுவது நல்லது.
மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் கஜுராஹோ (Khajuraho) பகுதியில் காணப்படும் அழகான சுவர் சிற்பங்கள் இடைக்கால பாரம்பரியத்தின் சின்னமாக திகழ்கிறது. இது கலை மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறந்த இடமாக இருந்தாலும், இதை கண்டு ரசிக்க கோடைக்காலம் சிறந்தது அல்ல. பார்ப்பதற்கு பசுமையாக இருந்தாலும், பல்லை காட்டும் கோடை வெயிலின் தாக்கத்தை உங்களால் சமாளிக்க இயலாது.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள தங்க கோயில் அனைத்து மதத்தினரும் செல்லும் கோயிலாக உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வருவதால் எப்போதும் கூட்டம் நிறைந்த பகுதியாகவே காணப்படுகிறது. உச்சகட்ட வெயில் காலமாக இருக்கும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் அதை ரசிப்பதை காட்டிலும், இனிமையான அனுபவத்தை பெற நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை செல்வது சிறந்தது.