1915 ஆம் ஆண்டில் இந்த பகுதியில் மாணிக்கக்கல் எடுக்கும் சுரங்கம் ஒன்று தொடங்கப்பட்டது. நிறைய சுரங்கங்கள் வரவர தாதுக்கள் இல்லாத சுரங்கத்தை சுரங்கத்தில் வேலை செய்யும் மக்கள் வசிக்க பயன்படுத்தத் தொடங்கினர். அதுவும் கோடை காலம் வந்துவிட்டால் கூப்பர் பேடி பகுதியின் சராசரி வெப்பநிலை 45 டிகிரியை தாண்டும்.
வெப்பத்தை பொறுக்க முடியாமல் சுரங்கத்திற்குள் பதுங்கத் தொடங்கினர். குளிர்காலத்திலும் சுரங்கத்தின் வெப்பநிலை சீராக இருந்ததால் நிரந்தரமாக இந்த சுரங்களையே தங்கள் வீடுகளாக மாற்றத் தொடங்கினர். அடிப்படை வசதிகளோடு கட்டப்பட்ட வீடு காலப்போக்கில் ஆடம்பர வசதிகளையும் பெறத்தொடங்கியது. இந்த வீடுகளுக்கு ஏசி, ரூம் ஹீட்டர் என்று ஏதும் தேவைப்படுவது இல்லை. ஆண்டு முழுக்க ஒரே தற்பவெப்ப நிலை தான் இருக்கிறது.
இதனால் 4 வீடு நாற்பது வீடானது. படிப்படியாக ஒரு ஊரே உருவானது. நிலத்திற்கு மேலேயும் ஒரு சில வீடுகளின் கட்டிடங்கள் இருக்கும். வெளியில் பார்க்க சாதாரணமாக தெரியும் ஆனால் உள்ளே வந்தால் பிரமிக்க வைக்கும். இந்த கிராமத்திற்கான தண்ணீரை இந்த கிராமத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் இருந்து பைப் மூலம் நிலத்திற்கு அடியிலேயே கொண்டுவந்துள்ளனர்.
இந்த கிராமத்தின் புகழ் ஆஸ்திரேலியா மட்டுமின்றி உலகின் பல பகுதிகளுக்கும் பரவியது. இந்த இடத்தை மக்களுக்கு காட்டும் வகையில் 2000 ஆம் ஆண்டு வெளியான 'பிட்ச் பிளாக்' என்ற படத்தை இந்த நிலத்தடி கிராமத்தில் தான் எடுத்துள்ளனர். நீங்களும் ஆஸ்திரேலியா செல்லும் வாய்ப்பு கிடைத்தால் கூப்பர் பேடி கிராமத்திற்கு சென்று வாருங்கள்