தவாங், அருணாச்சலப் பிரதேசம் : இந்தியாவின் அதிகம் பாராட்டப்படாத இடங்களில் இது முக்கியமான ஒன்றாகும். இங்கு சென்று வந்த யாரை கேட்டாலும் இந்த இடத்தின் புகழை பாடிக் கொண்டிருப்பார்கள். அந்த அளவிற்கு இயற்கை எழிலும் ரம்மியமான காட்சிகளும் மிகுந்து, மனதிற்கு அமைதியை தரும் விதமாக இந்த இடம் அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து இங்கு வருவதற்கு அனுமதி பெற்று உள்ளே நுழைய முடியும். இவை அனைத்தையும் கடந்து நீங்கள்ங்கள் உள்ளே வந்த பிறகு, கண்டிப்பாக இது ஒரு சொர்க்கமாகஇருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
கோகர்நா, கர்நாடகா : கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோகர்ணா என்னும் இடம் பற்றி பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் கிறிஸ்துமஸ் பண்டிகையை மனதிற்கு இதமான அமைதியான இயற்கை எழில் மிகுந்த சூழலில் குடும்பத்துடன் அனுபவிக்க விரும்பினால் இந்த இடம் மிகவும் ஏற்றது. அலாதியான கடற்கரையில் கூட்ட நெரிசலின்றி இருக்கும் இந்த நகரமும் கண்டிப்பாக மன அழுத்தத்தை குறைத்து மனதிற்கு அமைதியை கொடுக்கும். மேலும் இங்கு கோவில்களும் நிறைந்துள்ளதால் குடும்பமாக சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடமாக இது உள்ளது.
கலிம்போங், மேற்கு வங்காளம் : இந்த இடமும் இன்னமும் பலரால் அறியப்படாமல் உள்ளது. இங்கு சுற்றி பார்ப்பதற்கு பல்வேறு இடங்கள் உள்ளன. மேலும் தங்குவதற்கு ஆடம்பர விடுதிகளும் இங்கு இருப்பதால், குடும்பமாக வந்து பொழுதைக் கழிப்பதற்கு இது உகந்த இடமாக உள்ளது. முக்கியமாக மிகவும் பிரபலமான டார்ஜிலிங் என்ற இடத்தில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் சுற்றிப் பார்ப்பதற்கு பல்வேறு இடங்கள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை.
ஓர்ச்சா கோட்டை, மத்திய பிரதேசம் : பெத்வா நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இடம் ஆகும். பண்டைய காலத்து குடைவரை கோயில்கள இங்கு நிறைந்துள்ளன. அதில் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களான ஜஹாங்கீர் மஹால், ராமராஜா கோவில், லக்ஷ்மி நாராயணர் கோவில் ஆகியவை சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள் ஆகும்.
கட்ச், குஜராத் : இந்தியாவில் உள்ள மற்றொரு சிறந்த அதேசமயம் பிரபலமடையாத ஒரு சுற்றுலா தளமாகும். வெள்ளை உப்புக்களால் உருவான பாலைவனத்தின் வித்தியாசமான காட்சியை உங்களால் இங்கு காண முடியும். மேலும் குளிர்காலங்களில் இங்கு நடைபெறும் ரன் உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். அதற்காக இங்கு கூடாரங்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றனர்.
மூணாறு, கேரளா :கேரளா மாநிலத்தில் உள்ள மூணாறு மேலே கூறிய அனைத்தையும் விட சற்று பிரபலமான இடமாகும். இயற்கை காட்சிகள் நிறைந்து மலை மேல் அமைந்துள்ள இந்த நகரத்தில் மேகக் கூட்டங்கள் உங்களை உரசி செல்லும் அற்புதமான அனுபவத்தை பெற முடியும். மேலும் பறந்து விரிந்த தேயிலை தோட்டங்களையும் ஆங்காங்கு இயல்பாகவே தோன்றியிருக்கும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு மகிழ முடியும். முக்கியமாக கிறிஸ்துமஸ் நேரத்தில் இங்கு சென்றால் மிகவும் சிறப்பான அனுபவங்களை பெற முடியும்.
ஹம்பி, கர்நாடகா : கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள இந்த இடம் மலைகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையில் அமைந்துள்ளது. யுனெஸ்கோவால் பாதுகாப்பான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் ஆர்வம் உள்ளவர்களுக்கும், கூட்ட நெரிசலில் இருந்து விலகி தனிமையை விரும்புபவர்களுக்கும், இயற்கையை விரும்புபவர்களுக்கும் இந்த இடம் வரப் பிரசாதமாக அமைந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட பண்டைய காலத்து நினைவுச் சின்னங்களும் கோவில்களும் மற்றும் விஜயநகர பேரரசின் எஞ்சி உள்ள இடங்களையும் கொண்டுள்ளது இந்த ஹம்பி என்ற இடம். இதை திறந்தவெளி அருங்காட்சியகம் என்று பலர் அழைக்கிறார்கள்.