என்னதான் கூட்டம் நிறைந்த நெரிசலான தலைநகராக இருந்தாலும் தன் அழகியலை இன்னும் பழமை மாறாமல் பதுக்கி வைத்திருக்கிறது. ஆனால் அதன் அழகை ரசிக்கத்தான் இங்கு யாரும் இல்லை. நீங்களும் வேலை, வீடு என போர் அடிக்கும் வாழ்க்கையிலிருந்து சற்று விலகி மனதை இளைப்பாற நினைத்தால் நீங்கள் இருக்கும் அதே பரபரப்பான சென்னையில் சுற்றிப்பார்க்க பல இடங்கள் உண்டு. இவை நீங்கள் தினம் தினம் கடந்து சென்ற பாதையாக இருக்கலாம். சற்று ஒரு நிமிடம் நின்று அதை கவனியுங்கள். அதன் அழகு உங்களுக்கு புரியும். அப்படி சென்னையில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள் என்னென்ன பார்க்கலாம்.
சென்னை மெரினா கடற்கரை அல்லது பெசண்ட் நகர் : சென்னையின் விடியலை நீங்கள் கடற்கரையிலிருந்து தொடங்கினால்தான் அதன் ஆர்பறிக்கும் அழகை கண்டு களிக்க முடியும். காலை சூரியன் உதிக்கும் காட்சியை ரசிக்க மெரினா அல்லது பெசண்ட் நகர் பீச் ஏற்ற இடம். மாலை நேரங்களில் மக்கள் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் கடல் அழகை ரசிப்பது கொஞ்சம் கடினம். எனவே அதிகாலை சூரிய விடியலை கண்டு விட்டு மனதை அலையோடு அலைபாய விட்டு கால்களை கொஞ்சம் ஆசுவாசப்படுத்த கடற்கரையில் காலை 6 மணிக்கு தொடங்குங்கள்.
எழும்பூர் அருங்காட்சியம் : சென்னை மெரினா கடற்கரையில் நேரத்தை கழித்த பின் 10 மணி போல் எழும்பூர் அருங்காட்சியம் செல்வது சிறப்பு. சென்னையில் வெயில் தாக்கம் அதிகம் என்பதால் நீண்ட நேரம் வெளியில் சுற்றுவதைக் காட்டிலும் இது போன்ற இண்டோர் சுற்றுலா தளங்களை தேர்வு செய்வதால் உங்கள் சோர்வடையாமல் இருப்பீர்கள். எழும்பூர் அருங்காட்சியம் நம் வரலாற்றை தெரிந்துகொள்ள சிறந்த இடம். கலை சார்ந்த பல பொக்கிஷங்கள் இங்கு உள்ளன. அதோடு பழமை வாய்ந்த கன்னிமாரா நூலகத்தையும் ஒரு விசிட் அடித்துவிட்டு வாருங்கள். பெரம்பூரி பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பழம்பெரும் ரயில் அருங்காட்சியமும் உள்ளது அதையும் சென்று பார்க்கலாம்.
தட்சிண சித்ரா : நீங்கள் காலையில் சூரியன் விடியலை காண பெசண்ட் நகர் போகிறீர்கள் எனில் அங்கிருந்து அப்படியே இந்தியாவின் பழமையான வீடுகளின் அருங்காட்சியமான தட்சிண சித்திராவுக்கு செல்லுங்கள். அங்கு இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்தின் வீடு அமைப்பு எப்படி இருக்கும் என ஒரே இடத்தில் ஒன்று சேர காணும் அனுபவம் கிடைக்கும். அங்கேயே ஷாப்பிங் செய்யலாம்.
மைலாப்பூர் கபாலீஷ்வரர் கோவில் : இந்த கோவிலுக்கு வர பெசண்ட் நகர் அல்லது மெரினா பீச் சென்றிருந்தாலும் வரலாம். 6 மணி போல் கபாலீஷ்வரர் கோவில் செல்லலாம். இது ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த பார்த்த சாரதி கோவில். மைலாப்பூரில் உள்ளது. அதோடு இந்த கோவிலை சுற்றி உள்ள கடைகளில் சூப்பரான ஃபில்டர் காஃபியும் டேஸ்ட் செய்யலாம்.