இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட பழங்குடியினர் இனங்கள் வசிக்கின்றனர். ஒவ்வொரு பழங்குடியினரும் அதன் சொந்த பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அழிந்து விடாமல் பாதுகாக்க தொடந்து பின்பற்றுகிறார்கள். ஆண்டு முழுவதும் வெவ்வேறு பழங்குடியினர் திருவிழாக்கள் நாடு முழுவதும் ஏற்பாடு செய்யப்படுகின்றன
பழங்குடி சமூகங்களுக்கு அவர்களின் கலை, கலாச்சாரம், உணவு, நடனம் மற்றும் இசையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த ஒரு வாய்ப்பைக் கொண்டுவருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஏற்பாடு செய்யப்படும் இந்த அப்பழங்குடியின திருவிழாக்களை காண இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பார்வையாளர்கள் வந்து குவிகின்றனர்.
ஹார்ன்பில் (Hornbill) திருவிழா : நாகாலாந்தின் மிகவும் பிரபலமான பழங்குடியினரின் திருவிழா வழக்கமாக டிசம்பர் 1 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும். இந்த விழா அதன் இசைக்காக அறியப்படுகிறது. அவர்களது விவசாயத்தின் வெற்றிக் குறியாக நம்பப்படும் ஹார்ன்பில் பறவைகளை பாதுகாக்கவும் கொண்டாடவும் தான் இந்த ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது.
சாங்காய்(Sangai ) திருவிழா : மணிப்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 முதல் நவம்பர் 30 வரை சாங்காய் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா சாங்காய் மான் பெயரால் அழைக்கப்படுகிறது. இது மணிப்பூரின் மாநில விலங்கு. 2010ஆம் ஆண்டு தொடங்கிய இவ்விழா இன்று நாட்டின் மிகப் பெரிய பழங்குடியினரின் திருவிழாவாக மாறியுள்ளது. மணிப்பூரின் பல்வேறு பழங்குடியினர் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை உலகிற்கு வெளிப்படுத்த இந்த திருவிழா ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
மணிப்பூரின் பாரம்பரிய நடன வடிவமான 'ராஸ் லீலா' (Ras Leela)பொதுவாக இந்த விழாவின் தனித்துவமான அம்சமாகும். சாங்காய் திருவிழா மணிப்பூரில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அவர்களின் கைவினைப்பொருட்கள், கைத்தறி மற்றும் நடனங்களை உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை வழங்குகிறது.