பறவைகளை போல வானில் பறக்க யாருக்கு தான் ஆசை இருக்காது. விமானத்திற்குள் அமர்ந்து பறந்தாலும் , ஹாட் ஏர் பலூன்களின் கூடைக்குள் நின்றுகொண்டு வானத்தில் பறந்தாலும் அதில் த்ரில் எதுவும் இருக்காது. ஆனால் பறக்கும் விமானத்தில் இருந்து கைவிரித்து குதிக்கும் அனுபவம் நிச்சயம் உண்மையாக பறவை போல் பறக்கும் அனுபவத்தை கொடுக்கும். அதற்கு ஸ்கை டைவிங் என்று பெயர்.
தமிழ்நாடு மக்களுக்கு மிக அருகில் இருக்கும் ஸ்பாட் என்றால் அது பாண்டிச்சேரிதான். பார்ட்டி நகரத்தில் சாய் டைவிங் வசதி இருப்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால் அழகிய நீல நீர், வெள்ளை மணல் கடற்கரைகள் , அடுக்கிவைத்த சீட்டுக்கட்டுபோல நகரம். இந்த இடத்தை மேலே இருந்து பார்ப்பது எப்படி இருக்கும் என்று எப்போதாவது கற்பனை செய்திருக்கிறீர்களா? அடுத்தமுறை பார்த்துவிடுங்கள்.
மற்றொரு தரமான சம்பவம் செய்யும் இடம் தெலுங்கானாவில் உள்ள நாகார்ஜுனா சாகர் விமான நிலையம். இங்கு இருந்து ஸ்கை டைவ் செய்யும் வாய்ப்பைப் பெறலாம். ஸ்கைடிவிங் இங்கே பாதுகாப்பானதா என்று நீங்கள் நினைத்தால், கவலைப்பட வேண்டாம். இங்கே உள்ள , அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர்கள் யுனைடெட் ஸ்டேட்ஸ் பாராசூட் அசோசியேஷனால் உரிமம் பெற்றுள்ளனர்.மேலும் இதற்காக மூன்று நாள் பயிற்சி கோடா தருகிறார்கள்.
ஸ்கை டைவிங் கற்க விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய இடம் என்றால் அது ஹரியானாவில் உள்ள நர்னால். இங்கு ஸ்கைஹை டைவிங் நிறுவனத்தால் டேன்டெம் ஜம்ப் மற்றும் ஸ்டேடிக் லைன் ஜம்ப் என்ற இரண்டு வகையான ஸ்கைடிவிங் சேவைகள் வழங்கப்படுகின்றன. முக்கிய ஸ்கைடிவிங்கிற்கு முன்னதாக சுமார் ஒரு மணிநேரப் பயிற்சியையும் வழங்குகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து 3 மணி நேர பயணத்தில் ஆம்பி பள்ளத்தாக்கை அடையாளம். இது இந்தியாவின் சிறந்த ஸ்கை டைவிங் இடங்களில் ஒன்றாகும், குறிப்பாக டேன்டெம் ஜம்ப்பிற்கு ஏற்ற இடமாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இருந்து தேர்ந்த பயிற்றுநர்கள்தான் இந்த ஸ்கை டைவிங் பயிற்சிகளை வழங்குகிறார்கள்.
ஹிமாச்சல பிரதேசத்தில் இருக்கும் பிர் பில்லிங் நாடு முழுவதிலுமிருந்து சாகச ஆர்வலர்களை ஈர்க்கிறது. இமயமலையின் அழகிய நிலப்பரப்பு சிறந்த ஸ்கை டைவிங் விருப்பங்களை உருவாக்குகிறது. உயரமான மலைத்தொடர்கள், ஆழமான பள்ளத்தாக்குகள், வசீகரமான கிராமங்கள் மற்றும் பசுமையான காடுகளுக்கு மேலே நீங்கள்பறக்க வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும் தானே.
குஜராத்தில் உள்ள தீசா என்ற அழகிய ஏரிக்கரை நகரத்தின் திறனை இந்திய விளையாட்டு ஆணையம் அங்கீகரித்து, ஸ்கைடிவிங்கிற்கான சான்றளிக்கப்பட்ட டிராப் மண்டலமாக இதை மாற்றியது. ஒவ்வோர் ஆண்டும், பல ஸ்கைடைவிங் நிகழ்வுகள் இங்கு நடைபெறுகின்றன. இதற்காக 1.5 நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. உதவியாளர்கள் இன்றி தனியாக பறந்து சரியாக தரை இறங்க கற்றுக்கொடுக்கப்படுகின்றனர்.