ரயில் பயணங்கள் உண்மையில் நீங்கள் டிக்கெட்டில் செலவழிக்கும் ஒவ்வொரு பைசாவிற்கும் மதிப்பு அளிக்கும் ஒரு முறை தான் பயில் சென்று சேரும் இடத்தை விட செல்லும் பாதை பல புதிய காட்சி அனுபவங்களை அளிக்கும். பசுமையான வயல்புறங்கள், அடர்ந்த காடுகள், பனிமலைகள், பாலைவனங்கள் என்று எல்லா இடங்களையும் கடந்து பயணிக்கும். அதில் இந்தியாவில் உள்ள நீர்நிலைகளின் அழகிய காட்சிகளை வழங்கும் 4 ரயில் பாதைகளை பற்றி உங்களுக்கு சொல்கிறோம்.
மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரை : இந்தியா மட்டுமின்றி உலகின் சிறந்த ரயில் பயணங்களில் ஒன்று, மண்டபம் முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் ரயில் பாதை. இந்த ரயில் இந்தியாவின் இரண்டாவது நீளமான பாலமான 2.2 கிமீ நீள பாம்பன் பாலத்தின் மீது அழைத்துச் செல்லும். இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை பாம்பன் தீவுடன் இணைக்கும் ஒரே பாதை இதுதான். அகண்ட இந்தியபெருங்கடலின் காட்சி உங்களை நிச்சயம் சிலிர்க்கச்செய்யும்.
புவனேஸ்வர் முதல் பிரம்மாபூர் வரை : கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும் ஒடிசாவின் புகழ்பெற்ற சில்கா ஏரிக்கும் இடையில் அமைந்துள்ள புவனேஸ்வர் முதல் பிரம்மாபூர் வரையிலான ரயில் பாதை நிச்சயம் தனித்துவமானது தான். ஒருபுறம் அமைதியான சில்கா ஏரியையும், மறுமுனையில் அடர்ந்த காடுகள் நிறைந்த மால்யாத்ரியையும் இந்த ரயில் பயணத்தில் காணலாம். அதேபோல புலம்பெயர் பறவைகளின் சரணாலயத்தையும் பார்க்கலாம்.
மும்பை முதல் கோவா வரை : கொங்கன் இரயில்வே சார்பில் சஹ்யாத்ரி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் ஒரு அழகிய பாதை அமைந்துள்ளது. நூற்றுக்கணக்கான சுரங்கப்பாதைகள், ஆறுகள் மற்றும் பாலங்கள் வழியாக இந்த ரயில் பயணிக்கும். புகழ்பெற்ற பன்வல்நதி பாலம் வழியாக பாயும் இந்த ரயில் அரபிக்கடல், மேற்கு தொடர்ச்சி மலை, என்று இயற்கை காட்சிகளை அள்ளித்தெளித்து கொண்டே இருக்கும்.
வாஸ்கோடகாமா டூ லோண்டா(Londa) : கோவாவிலிருந்து மற்றொரு அழகிய ரயில் பாதை வாஸ்கோடகாமாவிலிருந்து கர்நாடகாவின் லோண்டா வரை விரிகிறது. இந்த ரயில் பயணம் மேற்குத் தொடர்ச்சி மலையில் இறங்கி மலையின் வளைவுகளோடு செல்கிறது. பிரமிக்க வைக்கும் தூத்சாகர் நீர்வீழ்ச்சி, கோவன் கடற்கரை காட்சிகளை உங்கள் கண்முன் கொண்டுவரும். கோவான் எக்ஸ்பிரஸ் கண்டிப்பாக மிஸ் பண்ணக் கூடாத ஒன்று தான்.