இந்தியாவில் உள்ள ஒருசில கோவில்களில் அசைவ உணவு இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. குல தெய்வம், உக்ர அம்மன், காவல் தெய்வம் உள்ளிட்ட சில தெய்வங்களின் ஆலயங்களில் கோழி, ஆடு பலியிடப்படும், மாமிசமும் படையலாக படைக்கப்படும். அந்த வகையில் இந்தியாவில் இருக்கும் இந்த கோவில்களில் பக்தர்களுக்கு அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
முனியாண்டி சுவாமி கோவில் – சிக்கன் & மட்டன் பிரியாணி : மதுரை மாவட்டத்திலுள்ள வடக்கம்பட்டி என்ற ஒரு சின்ன ஊரில் இந்தக் கோவில் இருக்கிறது. முனீஸ்வரர் என்று பரவலாக அறியப்படும் காவல் தெய்வம் இந்த கோவிலில் முனியாண்டி சுவாமி என்று அழைக்கப்படுகிறார். ஆண்டுதோறும் மூன்று நாட்களுக்கு திருவிழா நடத்தப்படும். முனீஸ்வரர் சிவபெருமானின் மற்றொரு அவதாரமாக வழபடப்படுகிறார். இங்கே சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி படைக்கப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பலரும் காலையிலேயே பிரியாணி சாப்பிடுவதற்கு இந்த கோவிலில் அலை மோதுகின்றனர்.
மீன் மற்றும் ஆடு - விமலா கோவில், ஒரிசா : துர்கையம்மனின் மற்றொரு அவதாரமாக கருதப்படும் விமலா அல்லது பிமலா என்று அழைக்கப்படும் அம்மனின் ஆலயத்தில் அசைவ உணவு பிரசாதமாக வழங்கப்படுகிறது. ஒரிசா, பூரியில் இருக்கும் பிரசித்தி பெற்ற ஆலயமான பூரி ஜகநாத ஆலயத்தின் ஒரு பகுதியாக, அந்த ஆலயத்தின் சக்தி பீடங்களில் ஒன்றாக விமலா கோவில் உள்ளது. வட மாநிலங்களில் விமரிசையாக கொண்டாடப்படும் துர்காஷ்டமி மற்றும் நவராத்திரியின்போது இந்த கோவிலில் மீன் சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். அதேபோல சூரிய உதயத்திற்கு முன்பு (ஆண்) ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு சமைக்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படும். இவை அனைத்துமே பூரி ஜெகந்நாதரின் பிரதான ஆலயம் திறப்பதற்கு முன்பு முடிந்துவிடும்.
ஆட்டுக்கறி – தற்குலா தேவி ஆலயம், உத்தரபிரதேசம் : உத்தரப்பிரதேச மாவட்டத்தில் கோரப்பூர் என்ற ஊரில் இருக்கும் இந்த கோவிலுக்கு, ஒவ்வொரு ஆண்டும் கிச்சரி மேலா என்ற திருவிழாவின்போது பக்தர்கள் குவிந்து விடுவார்கள். பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் இருந்து சித்திரை மாதம் நவராத்திரியின்போது பக்தர்கள் இங்கு குவிந்து அம்மனுக்கு ஆடுகளை பலியிடுவார்கள் அங்கேயே வெட்டி ஆடுகளை சமைத்து நெய்வேத்தியம் செய்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.
மீன் மற்றும் கள் – பரிசினி கடவு முத்தப்பர் ஆலயம், கேரளா : கலியுக கடவுள் கல்கி என்று கூறுவது போல, கேரளாவில் சிவ பெருமான் மற்றும் விஷ்ணுவின் அவதாரமாக முத்தப்பர் பரிசின கடவு ஆலயத்தில் வணங்கப்படுகிறார். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், மீன் மற்றும் கள் ஆகியவற்றை இறைவனுக்கு படைத்து தங்களுடைய வேண்டுதல்களை முன் வைப்பார்கள். அவ்வாறு செய்யும் பொழுது மக்களுடைய வேண்டுகோள்கள் அனைத்தும் நிறைவேறும் என்ற ஐதீகம் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் பிரசாதங்கள் அனைத்துமே பக்தர்களுக்கு வினியோகம் செய்யப்படும்.
இறைச்சி – காளி கட், மேற்கு வங்காளம் : இந்தியாவில் உள்ள 51 சக்தி பீடங்களில் ஒன்றான காளி கட், நூற்றாண்டுகள் கடந்த பழமையான ஆலயமாகும். பெரும்பாலானவர்கள் இங்கே காளி தேவிக்கு ஆடுகளை பலி கொடுப்பார்கள். மற்றொரு சக்தி பீடமான தக்ஷிநேஷ்வரர் காளி கோவிலிலும், மீன் உணவுகள் பிரசாதமாக படைக்கப்படும். ஆனால், இந்த கோவிலில் பலி கொடுக்கப்படாது.
மீன் மற்றும் இறைச்சி – காமாகாயா கோவில், அசாம் : அசாம் மாநிலத்தில், சக்தி பீடங்களில் ஒன்றானா மா காமாகாயா என்ற ஆலயம் உள்ளது. மந்திர தந்திரங்களுக்கு பெயர் பெற்ற இந்த ஆலயம் அசாம் மாநிலத்தில் நிலாச்சல் மலைச்சிகரங்களில் உள்ளது. காமாகாயா அம்மனுக்கு இரண்டு விதமான பிரசாதங்கள் படைக்கப்படுகிறது. ஒன்று, முழுக்க முழுக்க சைவ உணவும், மற்றொன்றில் ஆட்டிறைச்சியும் வழங்கப்படும். இரண்டு விதமான பிரசாதங்களிலுமே, வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்காமல் சமைக்கப்படுகிறது. உணவுகளை நைவேத்தியம் செய்யும் உச்சி கால வேளையில், ஆலயத்தின் கதவு மூடியே இருக்கும்.