டிரெக்கிங் அல்லது மலை ஏற்றம் என்பது எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது முயற்சிக்க வேண்டிய ஒரு சாகச பயணமாகும். இயற்கையோடு ஒன்றி ஒரு பயணம் செல்லும்போது, அது உடலையும் மனதையும் புத்துணர்ச்சி அடைய செய்யும். அதே நேரம் உடல் வலிமைக்கும் மனா உறுதிக்கும் சவால் விடும். அதை எதிர்கொள்ள சில தயாரிப்புகள் தேவை. அவற்றை தான் உங்களுக்கு சொல்கிறோம்.
உடல் தயாரிப்பு : கடினமான மலையேற்றத்திற்குச் செல்வதற்கு முன் உடல் தகுதி மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது அவசியம். சாதாரண தரையில் நடப்பதற்கும் மலையில் உள்ள கரடுமுரடான பாதையில் நடந்து செல்வதற்கும் வித்தியாசம் உண்டு. அதற்கு ஏற்ப தசைகளை பழக்கும் பயிற்சிகளையும், உயரத்தில் ஏறும்போது தேவைப்படும் இதய துடிப்பு சீரமைப்பு மற்றும் மூச்சு பயிற்சிகளை முன்னரே செய்து பழக வேண்டும். இதற்கு எளிமையாக தினமும்உங்கள் வீட்டில் உள்ள படிகளை ஏறி-இறங்கி பயிற்சி செய்யலாம்.
மன நிலை : கடினமான மலையேற்றத்திற்குச் செல்வது சவாலானதாக இருக்கலாம். ஆனால், மனதளவில் அதற்கு முன்னர் மனதளவில் தயாராக இருப்பது அவசியம். சார்லஸ் டார்வின் "நம் மனோபாவம் (Attitude) என்பது ஒரு சாகசத்திற்கும் சோதனைக்கும் இடையிலான வேறுபாட்டை உருவாக்குகிறது." என்றார். அதனால் எதையும் நின்று போராடும் தன்மையை பழக வேண்டும்.
வழி மற்றும் வழிகாட்டி தேர்வு: மலையேற்றத்தை மேற்கொள்வதற்கு முன், பொருத்தமான வழி மற்றும் அறிவு மிக்க வழிகாட்டியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் அனுபவ நிலை மற்றும் உடற்தகுதியுடன் பொருந்தக்கூடிய வழியைத் தேர்வுசெய்து, அதன் பாதை, நிலப்பரப்பு மற்றும் வானிலை பற்றிய அனைத்துத் தகவல்களைச் சேகரிக்க மறக்காதீர்கள். அதே போல அந்த இடத்தை பற்றி நன்கு தெரிந்த அனுபவசாலி வழிகாட்டியை துணையாகக் கூட்டிச்செல்லுங்கள்.
உபகரணங்கள்: மலையேற்றம் செல்லும் போது தேவையான முதுகுப்பை, கூடாரம், தூங்கும் பை, காலணி மற்றும் கைத்தடி போன்ற பொருட்களை சரியாக எடுத்துச்செல்லுங்கள். அதேநேரம் உபகரணங்கள் இலவாகவும், நீர்ப்புகாதன்மையுடனும்(waterproof), மற்றும் பயன்படுத்த வசதியாக இருப்பதை உறுதி செய்யவும். கூடுதலாக, தண்ணீர் பாட்டில், ஹெட்லேம்ப்(headlamp) போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.
ஆடை மற்றும் பாதணிகள்: வானிலை மற்றும் நிலப்பரப்பு நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, மலையேற்றத்திற்கு பொருத்தமான ஆடை மற்றும் காலணிகளைத் தேர்வு செய்யவும். அடுக்கு ஆடைகள் உடல் வெப்பநிலையை சீராக்கவும், வெயில், மழை மற்றும் குளிரில் இருந்து பாதுகாக்கவும் உதவும். கொப்புளங்கள் அல்லது காயங்களைத் தவிர்க்க நல்ல தரமான, உறுதியான பாதணிகளை அணிந்துகொள்ளுங்கள்.
பாதுகாப்பு: மலையேற்றம் செல்லும் பொது மேலே வெயில்,காட்டு பூச்சிகள் ஆகியவை படும். எனவே சூரியனின் கதிர்களில் இருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது முக்கியம். அதேபோல பூச்சி விரட்டிகளை கையில் வைத்துக்கொள்ளுங்கள். கூடுதலாக, வலி நிவாரணிகள், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் வயிற்றுப்போக்கு எதிர்ப்பு மாத்திரைகள் போன்ற அடிப்படை மருந்துகளை எடுத்துச் செல்வது அவசியம்.
அனுபவத்திற்கு கேளுங்கள்: இதற்கு முன் அங்கு சென்று வந்த மக்கள் அந்த இடத்தை பற்றிச் சொல்வதைத் தெரிந்துகொள்வது சுவாரஸ்யமாந முறையில் உங்களுக்கு உதவும். இன்டர்நெட்டில் கிடைக்காத இடங்களை கூட அவர்கள் உங்களுக்கு சொல்வார்கள். அதேபோல,மலையேற்றத்தின் போதுவரும் சிக்கல்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம்.அதற்கு முன்னரே தயாராகிக்கொள்ளலாம்.