உலகம் முழுவதிலும் கொரோனா நோய் தொற்றுகள் அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு நாடுகள் பயணங்களுக்கான தடைகளை விதித்திருக்கின்றன. மேலும், நோய் பரவாமல் தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டு உள்ளன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், சில நாடுகள் தங்களுடைய பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத்துறையை மீட்டெடுக்கும் வகையில் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளன.
அந்த வகையில் இரண்டு டோஸ்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திய இந்தியர்கள், பணி நிமித்தமாக அல்லது சுற்றுலாவுக்காக பயணிக்க விரும்பினால் ஏராளமான நாடுகள் அவர்களை வரவேற்க காத்திருக்கின்றன. இருந்தாலும் ரம்மியமான இயற்கை, வானளாவிய கலை நயமிக்க கட்டடங்கள் என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த 7 நாடுகளுக்கு இந்தியர்கள் தற்போது சுற்றுலா செல்வது சிறப்பாக அமையும்.
பிரிட்டன் : முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் நடவடிக்கைகள் அனைத்தையும் பிரிட்டன் அண்மையில் ரத்து செய்தது. பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது. அதேசமயம், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களையும் தங்கள் நாட்டுக்குள் அனுமதிக்க பிரிட்டன் முடிவு செய்துள்ளது. ஆனால், பயணம் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு உள்ளாக இவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும்.
தாய்லாந்து : பொதுவாக சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ள தாய்லாந்து, தற்போது நல்ல செய்தி ஒன்றை அறிவித்திருக்கிறது. அதாவது, பிப்ரவரி 1ஆம் தேதி முதல் சர்வதேச பயணிகளுக்கு குவாரண்டைன் தேவை இல்லை என்று இந்நாடு தெரிவித்துள்ளது. முன்னதாக, ஒமைக்ரான் பாதிப்புகளை ஒட்டி, குவாரண்டைன் கட்டுப்பாடுகளை தாய்லாந்து விதித்திருந்தது. இதனால், சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் அந்த கட்டுப்பாட்டை தற்போது தாய்லாந்து நீக்கியுள்ளது.
சிங்கப்பூர் : பிற நாடுகளைப் போல சிங்கப்பூர் அரசு தற்போது பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயணிகளுக்கு, லேசான அறிகுறி இருக்குமானால் முன்பு 10 நாட்கள் வரை குவாரண்டைன் இருக்க வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டு, தற்போது அது 7 நாட்களாக மாற்றப்பட்டுள்ளது. அதேசமயம், தடுப்பூசி செலுத்தப்பட்ட பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்தி இருந்தும் அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர்களுக்கு எந்தவித பரிசோதனை நடவடிக்கைகளும் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் : வியட்நாமில் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலில் உள்ள புதிய விதியின்படி, வெளிநாடுகளில் இருந்து இங்கு பயணிக்கும் பயணிகள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது மிக அண்மையில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதற்கான ஆதாரம் ஆகியவற்றை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். விமான பயணத்துக்கு முன்பாக மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், ஹோட்டல்களில் மூன்று நாட்கள் குவாரண்டைன் கட்டாயம் என்றும் இந்த நாடு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் : உலகில் பல நாட்களுக்கு முன்பாகவே கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இஸ்ரேல் ஜனவரி மாத தொடக்கத்திலேயே அறிவித்துவிட்டது. ஆபத்து பட்டியலில் உள்ள நாடுகளில் இருந்து பயணிக்கும் மக்கள், இஸ்ரேல் வந்தபிறகு 24 மணி நேரம் அல்லது பரிசோதனை சான்றிதழ் வரும் வரையிலும் குவாரண்டைன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்பட்டவர்கள் இஸ்ரேல் வரும்போது அவர்களுக்கு ஆண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.