இளைஞர்கள் முதல் நம்மில் பலர் கோடையில் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்தால், முதல் தேர்வு நிச்சயம் கோவாவாகத் தான் இருக்கும். ஆம் கோவாவை நினைக்கும் போது, சூரிய ஒளி படர்ந்த கடற்கரைகள், அழகான தென்னை மரங்கள் மற்றும் உற்சாகமான இரவு வாழ்க்கை போன்ற காட்சிகள் முதலில நம் மனதில் தோன்றும். இருப்பினும், வழக்கமான சுற்றுலா மையங்களை விட, மாநிலம் சுற்றுலாவாசிகளை ஈர்க்கக்கூடிய பலவற்றை வழங்கி வருகிறது.
சோர்லா தொடர்ச்சி மலை : கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவின் எல்லையில் அமைந்துள்ளது சோர்லா தொடர்ச்சி மலைப்பகுதி. மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகையும் வர்ணிக்கவே முடியாத அளவுக்கு, அவ்வளவு ரம்மியமாக இருக்கிறது, கண்களுக்கு சோர்வடையாமல் கண்டு ரசிக்கலாம். மலைகளின் உச்சிக்கு செல்ல டிரெக்கிங் மேற்கொள்ளலாம் அல்லது நிதானமாக அழகிய இயற்கைக்காட்சிகளை அனுபவிக்கலாம்.
சலாலிம் அணை : தெற்கு கோவாவில் அமைந்துள்ள சலாலிம் அணை அனைவரையும் ஈர்க்கக்கூடிய ஒரு சுற்றலாத்தளமாக உள்ளது. இந்த இடம் இப்பகுதிக்கு நீர் வளத்தின் ஆதாரமாக மட்டுமல்லாமல் பிரபலமான சுற்றுலாத்தலமாகவும் உள்ளது. அணையைச் சுற்றியுள்ள மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும்!. மேலும் அணையின் அமைதியை நிதானமாக உள்வாங்கி ரசிக்க, படகு சவாரி செய்யலாம்.
ராவலி வனவிலங்கு சரணாலயம் : நம்மால் அதிகம் அறியப்படாத இடங்களில் ஒன்று தான் நேத்ராவலி வனவிலங்கு சரணாலயம். தெற்கு கோவாவில் அமைந்துள்ள இந்த சரணாலயம் பல்வேறு வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு தாயகமாக உள்ளது. ஒருவேளை நீங்கள் சரணாலயம் வழியாக மலையேற்றம் செய்து, புலிகள், சிறுத்தைகள் மற்றும் யானைகள் போன்ற விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களைக் காணலாம்.
அல்டோனா கிராமம் : கோவாவின் பழைய வாழ்க்கை முறையைப் பற்றி அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால், வடக்கு கோவாவில் அமைந்துள்ள அல்டோனா கிராமம் தான் சரி. இங்கு அழகிய வீடுகள், பசுமை மற்றும் அமைதியான சுற்றுப்புறங்களுக்கு பெயர் பெற்றது. நீங்கள் கிராமத்தின் வழியாக நடந்து சென்றுகொண்டே உள்ளூர் சந்தைகள், கோவில்கள் மற்றும் தேவாலயங்களை ரசிக்கலாம்.