ஹனிமூன் போக ஆசைப்படும் எல்லா புதுமண தம்பதிகளுக்கும் குளிர்காலத்திலேயே திருமணம் நடந்தும் வாய்ப்பு கிடைப்பதில்லை, எதிர்பாராதவிதமாக வெயில் வாட்டி வதைக்கும் கோடை காலத்தில் திருமணம் செய்து கொள்பவர்களும் உண்டு. சூரிய வெப்பம் தகிக்கும் கோடை காலத்தில் திருமணம் செய்து கொண்டாதாலேயே நீங்கள் ஹனிமூனை ஹேப்பியாக கொண்டாட முடியாது என்பது அர்த்தமில்லை. இந்தியாவில் கோடைக் காலங்களிலும் இனிமையான யை அனுபவிக்க கூடிய இடங்கள் உள்ளன. எனவே, நீங்கள் கோடைகாலத்தில் குளுகுளுவென லவை அனுபவிக்க வேண்டும் என திட்டமிட்டிருந்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள இடங்கள் உங்களுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
1. ஸ்ரீநகர், ஜம்மு & காஷ்மீர்: உச்சரிக்கும் போதே சொர்க்கத்தை கண்ணில் பார்த்தது போன்ற அனுபவத்தை தரக்கூடிய சுற்றுலாத்தளம். பரந்து விரிந்த ஏரிகள், பசுமையான பள்ளத்தாக்குகள், வெண் போர்வை போர்த்திய பனிமலைகள் என எங்கு திரும்பினாலும் இயற்கையின் அழகியல் நிறைந்து காணப்படும் ஸ்ரீநகரில், ஹனிமூன் ஹாலிடேவை மகிழ்ச்சியாக செலவிடலாம். பாலிவுட் முதல் கோலிவுட் வரை திரைப்படங்களில் இதனை அழகை பார்த்து ரசித்த தம்பதிகள், ஹனிமூன் காலத்தை நேரில் வந்து களிக்கலாம். உங்கள் ஹனிமூனை மேலும் காதல் நிறைந்ததாக மாற்ற ஷிகாராவில் தங்குவது சிறப்பாக இருக்கும்.
2. சிம்லா, இமாச்சல பிரதேசம்: சிம்லா புதுமணத் தம்பதிகளுக்கான காதல் பயணத்திற்கு சிறந்த இடமாகும். அதன் அழகு, வசீகரம், ஆங்கிலேயர் கால கட்டமைப்புகள், வளைந்து நெளிந்து போகும் ரம்மியமான சாலைகள், குளிர்ச்சியான கிளைமெட், கண்கவர் இயற்கை காட்சிகள் ஆகியவை சிம்லாவை கோடைக்காலத்தில் தேனிலவுக்கு செல்ல வேண்டிய இடமாக அமைகிறது. சிம்லா வரும் ஜாக்ஹூ ஹில்ஸ், நால்தேஹ்ரா பீக், தி ஸ்கண்டல் பாயிண்ட் போன்ற இடங்களை கட்டாயம் கண்டு ரசிக்க வேண்டும்.
3. மவுண்ட் அபு, ராஜஸ்தான்: பாலைவானம், மணல் மேடுகள் நிறைந்த பகுதியான ராஜஸ்தானில், இப்படியொரு சொர்க்க பூமியா? என காண்போரை ஆச்சர்யப்பட வைக்கும் இடமாக மவுண்ட் அபு விளங்குகிறது. இந்த இடத்தின் பெரும்பாலான பகுதிகள் அனைத்தும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்தால் நன்றாக இணைக்கப்பட்டுள்ளன. எனவே உங்களுடைய தேனிலவை திட்டமிடுவதில் எவ்வித சிக்கலும் இருக்காது. நக்கி ஏரி, சன்செட் பாயிண்ட் மற்றும் புராதானமாக கோயில்களுடன் சேர்ந்து இந்த விசித்திரமான மலைவாசஸ்தலத்தில் வரலாற்றுக்கு முந்தைய மற்றூம் அழகிய கட்டிடக்கலைகள் அதிகம் உள்ளன.
4. அவுலி, உத்தரகாண்ட்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு அழகான சுற்றுலாத் தலமாகும். இது நாடு முழுவதிலுமிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. இங்கு ஹனிமூன் ஜோடிகள் இமயமலையின் நேரடி குளிர்ச்சியை அனுபவிப்பதோடு, நந்தா தேவி, கெர்சன் புக்யால், குவாரி புக்யால், செனாப் ஏரி மற்றும் ஜோஷிமட் ஆகியவற்றை கண்டு களிக்கலாம். மேலும் பனிச்சறுக்கு மற்றும் மலையேற்றம், டிரக்கிங், கேம்பிங் போன்ற சாசங்களையும் செய்து மகிழலாம்.
5. ஊட்டி, தமிழ்நாடு: தமிழ்நாட்டில் மலைகளின் அரசி என அழைக்கப்படும் ஊட்டி, புதுமண தம்பதிகள் ஹனிமூன் கொண்டாட ஏற்ற இடமாகும். இங்கு உங்கள் பார்ட்னர் உடன் அழகிய ஏரிகள், அடர்ந்த காடுகள், பசும் புல்வெளிகள், வித்தியாசமான தாவரங்கள், தூய்மையான காற்று ஆகியவற்றை அனுபவிக்கலாம். தாவரவியல் பூங்கா, படகு சவாரி, பைகாரா, அவிலஞ்சி, தொட்டாபெட்டா, கெய்ரன் ஹில்ஸ், கல்கட்டி அருவி உள்ளிட்ட பல இடங்களை கண்டு ரசிக்கலாம்.
6. டார்ஜிலிங், மேற்கு வங்கம்: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலம் தொட்டே கோடையின் கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பித்து, இதமான பருவநிலையை அனுபவிக்க ஏற்ற புகலிடமாக டார்ஜிலிங் உள்ளது. கிழக்கு இமயமலையின் பகுதியாக அமைந்துள்ள டார்ஜிலிங்கில் இருந்து, மேகங்கள் அற்ற சமயத்தில் நேபாளத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தை கூட கண்டு ரசிக்கலாம். உலகின் மிகப்புகழ் வாய்ந்த மூன்றாவது மிக உயரமான மலைச்சிகரமான கன்ஜென்ஜங்கா, ஊசியிலை மரங்கள், பல வண்ணமலர்கள், இலையுதிர் காடுகள் என ஹனிமூன் ஜோடிகள் தனிமையாய் ஆனந்தமாக செலவிட நிறைய இடங்கள் உள்ளன.