இந்த கோடை விடுமுறைக்கு தமிழ்நாட்டுக்குளேயே சுற்றிக் கொண்டு இருக்காமல் ஆந்திர மாநிலத்திற்கு ஒரு ட்ரிப் போடும் ஐடியா கொடுக்கத்தான் வந்துள்ளோம். இந்த கோடைக்கு விஜயநகரப் பேரரசின் வரலாற்று இடிபாடுகள் முதல் அழகிய அரக்கு பள்ளத்தாக்கு வரை ஆந்திரப் பிரதேசத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய முதல் 5 சுற்றுலாத் தலங்களை உங்களுக்கு சொல்கிறோம்.
இந்தியாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ஆந்திரப் பிரதேசம், அதன் வளமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் இயற்கை அழகுக்காக அறியப்படுகிறது. ஆந்திர உணவை பற்றி சொல்லவேண்டியதே இல்லை. பழங்கால கோவில்கள் மற்றும் அரண்மனைகள் முதல் இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரைகள் மற்றும் மலைவாசஸ்தலங்கள் வரை, ஆந்திரப் பிரதேசம் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்க நிறைய உள்ளது.
கோனசீமா டெல்டா : ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோனசீமா டெல்டா நிச்சயம் செழிப்பான குளுகுளு ஸ்பாட் தான். இது அதன் வளமான கலாச்சார பாரம்பரியம், பாரம்பரிய கலை வடிவங்கள் மற்றும் இயற்கை அழகுக்காக பிரபலமானது. டெல்டா பகுதி முழுக்க ஆறுகளால் சூழப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள கிராமங்களுக்கு சென்றால் பசுமையான சூழலுடன் புதிய கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள முடியும்.
அரக்கு பள்ளத்தாக்கு: அரக்கு பள்ளத்தாக்கு விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலைவாசஸ்தலம் ஆகும். அதன் இயற்கை அழகு மற்றும் காபி தோட்டங்களுக்கு பிரபலமானது. இந்த பள்ளத்தாக்கு நகர வாழ்க்கையின் சலசலப்பில் இருந்து தப்பிக்க வாய்ப்பை வழங்குகிறது. இங்கு நீங்கள் சூப்பரான ட்ரெக்கிங் செல்லலாம், இந்த மலைப்பகுதியில் ஏராளமான நீர்வீழ்ச்சிகள் உள்ளன. அதில் குளித்து குதூகலமாக இருக்கலாம்.
போரா குகைகள்: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனந்தகிரி மலையில் போரா குகைகள் அமைந்துள்ளன. சுண்ணாம்பு குகைகளான இங்கு அதன் தொங்கும் ஸ்டாலாக்டைட்டுகள் மற்றும் ஸ்டாலாக்மிட்டுகளின் அமைப்புகளைப் பார்க்கலாம். சாகச ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு இந்த குகைகள் சரியான இடமாகும். குகைகளுக்கு அருகிலுள்ள மலைகளில் மலையேற்றம் செய்யலாம்.
திருப்பதி: ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள திருப்பதி இந்தியாவின் மிகவும் பிரபலமான யாத்திரைத் தலங்களில் ஒன்றாகும். வெங்கடேசப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயில் திருப்பதியின் முக்கிய ஈர்ப்பாகும். சிக்கலான சிற்ப வேலைப்பாடுகள், தங்க முலாம் பூசப்பட்ட கோபுரம் மற்றும் புனிதமானதாகக் கருதப்படும் லட்டுப் பிரசாதம் ஆகியவற்றிற்காக இந்தக் கோயில் அறியப்படுகிறது.