வானத்தில் பறக்கவும், மலையேற்றத்தில் இயற்கையை ரசிப்பதும் யாருக்கு பிடிக்காது. இதுப்போன்ற இடங்களுக்குச் சென்றால் நம்மை அறியாமலே நமது மனம் துள்ளிக்குதிக்கும். இயற்கையாக மனிதர்களால் பறக்க முடியாது என்றாலும், செயற்கையாக பறப்பதற்கு ஸ்கை டைவிங், பனிச்சறுக்கில் சறுக்கு விளையாட்டு என பெரியவர்களையும், சிறுவர்களாய் மாற்றும் பல சாகச விளையாட்டுகள் இந்தியாவில் கொட்டிக்கிடக்கிறது. ஆம் பனி மூடிய இமயமலைத் தொடர்களிலிருந்து தெற்கின் வெப்ப மண்டல க்காடுகள் வரை பரந்து விரந்து கிடக்கும் இந்திய நாட்டில் பிரமிக்க வைக்கும் சாகச விளையாட்டுகளும் உள்ளன. இதோ இங்கே தெரிந்துக்கொள்ளுங்கள்.
குல்மார்க் பனிச்சறுக்கு, ஜம்மு காஷ்மீர் : இயற்கை கொஞ்சும் அழகு, திகைக்க வைக்கும் மலைகள், பனிப்பொழிவு என எப்போதும் கண்களுக்கு விருந்தாக அமைவது ஜம்மு காஷ்மீர் தான். கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இது "பூக்களின் புல்வெளி" என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு இயற்கை அழகை ரசிப்பதோடு சாகச விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இங்குள்ள குல்மார்க் பனிச்சறுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம். குல்மார்க்கில் ஸ்கை சீசன் பொதுவாக டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இருக்கும். குறிப்பாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் பனிப்பொழிவுடன் நமக்கு அட்வென்சராகவே இருக்கும். இதனால் தான் இந்த மாதங்களில் அதிகளவில் ஜம்முவை நோக்கி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.
ரிஷிகேஷில் ரிவர் ராஃப்டிங், உத்தரகண்ட் : ஆன்மீக தளங்களாக மட்டுமில்லாது இயற்கை அழகிற்குப் பஞ்சம் இல்லாத பகுதி என்றால் அது உத்தரகண்ட் தான். குறிப்பாக வளைந்து நெளிந்து கங்கை ஆற்றின் மேல் செல்லும் ரிவர் ராஃப்டிங் மிகவும் திரில்லானது. இதோடு பங்கீ ஜம்பிங், ஜிப் லைனிங், மலையேற்றம், ராட்சத ஊஞ்சல் மற்றும் பாறை ஏறுதல் போன்ற சிலிர்ப்பான சாகச விளையாட்டுகளுக்காக பிரபலமானது.
தானா, மத்தியப்பிரதேசம் : மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமம் தான் தானா. இங்குதான் இந்தியாவில் முதன் முறையாக ஸ்கை டைவிங் விளையாட்டைத் தொடங்கினர். வானில் பறக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்களுக்கு விஞ்ஞான ரீதியாக உதவுவது இந்த ஸ்கை டைவிங் தான். மற்ற இடங்களைப் போல் இல்லாமல் ஸ்கை டைவிங் மேற்கொள்ளும் போது பயிற்சியாளர் உடன் வருவார் என்பதால் இங்கு தைரியமாக நீங்கள் ஸ்கை டைவிங் மேற்கொள்ளலாம்.
மலையேற்றம், சிக்கிம் : மலையேறுவதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு சிறந்த இடம் என்றால் அது சிக்கிம் தான். உலகின் மூன்றாவது மிக உயரமான சிகரமான கஞ்சன்ஜங்கா மற்றும் சினியோல்சு,கப்ரு, பாண்டிம் மற்றும் ரதோங் போன்ற பிற சிகரங்கள் உள்பட அதிர்ச்சியூட்டும் மலைகள் இங்கு உள்ளன. இங்குள்ள புகழ்பெற்ற கோச்ச லா மலையேற்றத்திற்கு ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரை இருக்கும்.
கோவா மற்றும் அந்தமானில் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் : இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களை ஆராய்வதற்கான அற்புதமான வழிகள் என்றால் ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நோர்கெல்லிங் தான். நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடலுக்கு அடியில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீங்கள் கோவா மற்றும் அந்தமான் தீவுகளில் உள்ள சில ஸ்கூபா-டைவிங் இடங்களுக்குச் செல்ல வேண்டும். நிச்சயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சிறந்த இடமாகவே இது அமையும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை.