உலகம் முழுவதும் பனிக்காலம் முடிந்து வெயில் வருவதற்கு முன்பான அழகிய வசந்த காலத்தை ஆரம்பித்திருக்கிறது. வசந்த காலம் உலகின் பல பகுதிகளை மலர செய்கிறது என்றே சொல்ல வேண்டும். பனியில் உறைந்து கிடந்த தாவரங்கள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்றது போல தனது அழகிய மலர்களை உலகிற்கு காட்டும் நேரமாக இந்த மார்ச் முதல் மே வரையான காலம் இருக்கிறது. இந்த காலத்தில் வண்ணமயமாகும் இடங்களை பற்றி பார்ப்போம்
ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ(Hokkaido) நகரத்தில் வசந்த காலம் உண்மையாகவே ஒரு வண்ணமயமான காலமாகவே இருக்கும். செர்ரி பூக்கள் ஏப்ரல் பிற்பகுதியில் இருந்து மே நடுப்பகுதி வரை பூக்கும். மேலும் ஹொக்கைடோ பள்ளத்தாக்கில் பாசி மற்றும் லில்லி ஆகியவை மே தொடக்கத்தில் இருந்து ஜூன் தொடக்கத்தில் முழுமையாக பூக்கும். இந்த காலத்தில் விவசாய நிலங்களில் நெல் நடவு தொடங்குகிறது, சப்போரோ யோசகோய் சோரன் திருவிழா(Sapporo Yosakoi Soran Festival) நடக்கிறது.
நியூசிலாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரம் அதன் குளிர்காலத்தில் இருந்து விழித்தெழும் போது, அதன் அழகிய கால்வாய்களில் மரங்கள் பசுமையுடன் நிறைந்து, மலை சாரல்கள் எல்லாம் வண்ண வண்ண துலிப் பூக்களால் நிறைகிறது. முக்கியமாக இந்த ஆண்டு நடக்கும் திருவிழாவிற்காக கியூகென்ஹாஃப் துலிப் கார்டன்ஸ் (Keukenhof Tulip Gardens) மார்ச் 23 முதல் 14 மே 2023 வரை திறந்திருக்கும்.
இந்தியாவில் உள்ள உத்திரகாண்ட மாநிலமும் இமாலய மலை பனியில் இருந்து வெளிவந்து சுற்றிலும் ரோடோடென்ட்ரான்கள்(rhododendron) மற்றும் செர்ரி பூக்களால் அழகுபடுத்த பட்டிருக்கும். ரோடோடென்ட்ரான் பூக்களின் சிறந்த காட்சிகளை பெற சந்திரசைலம் மலை பகுதியில் ட்ரெக்கிங் செல்லுங்கள். வாழ்க்கையின் மறக்க முடியாத காட்சியாக அது இருக்கும்.
ஸ்ரீநகரில் உள்ள இந்திரா காந்தி நினைவு பூங்காவில் வசந்த காலத்தில் துலிப் மலர்கள் பூத்துக் குலுங்குகிறது.அழகான துலிப் மலர்களை மலை பகுதி முழுவதும் பார்ப்பது மட்டுமல்லாமல், பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், உணவுக் கடைகள் மற்றும் காஷ்மீரின் வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை வெளிப்படுத்தும் பல நிகழ்ச்சிகள் காஷ்மீர் துலிப் திருவிழாவில் இடம்பெறும்.
பெல்ஜியம் நாட்டில் உள்ள ஹாலர்போஸ்(Hallerbos) காடு வசந்த காலம் தொடங்கியதும் நீல காடு என்றும் அழைக்கப்படுகிறது. அதற்கு காரணம் வசந்த காலத்தில், காடுகளின் தளம் நீல வண்ண பூக்களால் மூடப்பட்டிருக்கும். காட்டில் உள்ள நிலம் முழுக்க நீல பூக்கள் பூத்து குலுங்குவதால் அங்கு புகைப்பட குழுவினர் குவிகின்றனர்.