முதல் பக்கத்திற்கும் இரண்டாம் பக்கத்திற்கும் இருந்து இடைவெளியால் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தால் பலர், 5 பாகங்களையும் கடகடவென்று படித்து முடித்தனர். இதனால் படிக்கும் பழக்கம் அதிகமானது. இந்த புதிய பழக்கத்தால், பொன்னியின் செல்வனுக்கு அடுத்து என்ன நாவல் படிக்கலாம் என்ற தேடல் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு தான் இந்தத் தொகுப்பு..
ராஜராஜ சோழன் பிறந்தது முதல் முடிசூடும் வரையான சோழ வம்சத்தின் குடும்பத்திற்குள் உண்டான அரசியல் சலசலப்புகளை அடிப்படையாகக் கொண்டு கற்பனையாக எழுதப்பட்டது தான் கல்கியின் பொன்னியின் செல்வன். அதே ராஜராஜன் தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சரித்திரத்தை கற்பனை கலந்து கதையாக வடித்தது தான் எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய நூல் உடையார்.
அவரது மகன் ராஜேந்திரனை வைத்தும் அவரே மற்றொரு நாவலை படைத்துள்ளார். எழுத்தாளர் பாலகுமாரனின் கங்கை கொண்ட சோழன் நாவலானது ராஜேந்திரரின் ஆட்சி காலத்தில் சோழ நாடு மேற்கொண்ட படையெடுப்புகள் மற்றும் வெற்றிகள், கங்கை கொணர்ந்து இங்கு வந்து கோவில் காட்டியது, அயல்நாட்டு வாணிபம் மற்றும் கலாச்சாரம் பற்றி விரிவாக பேசும் நூல்
பொன்னியின் செல்வன் படம் பார்த்தவர்களுக்கு, கதை படித்தவர்களுக்கும் அதில் வரும் பல்லவ மன்னனை நினைவிருக்கும் அதை சார்ந்து கல்கி மற்றொரு புத்தகத்தை எழுதியுள்ளார். அது தான் சிவகாமியின் சபதம். அமரர் கல்கி எழுதிய இந்த நாவலில் காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட போர்ச் சூழலையும், அதன் தொடர்ச்சியாகச் சாளுக்கிய நாட்டின் தலைநகர் வாதாபியின் மீது பல்லவர் போர்தொடுத்தது பற்றிய செய்திகளையும் உள்ளடக்கி எழுதப்பட்டது. அதற்கு இடையே சிவகாமியின் காதலும் சபதமும் சுவாரசியம் சேர்க்கும்.
கல்கி எழுதிய மற்றொரு வரலாற்று நாவல் பார்த்திபன் கனவு. ஒரு காலத்தில் பேரரசாக விளங்கிய சோழப் பேரரசு பல்லவர்களுக்கு அடிமையான நாடாகிப் போனது. பல்லவர்களுக்கு கப்பம் கட்டும் சுதந்திரம் அற்ற ஒரு குறுநில அரசர் பார்த்திபன் எனும் சோழ மன்னரின் சுதந்திரக் கனவு மற்றும் அந்த கனவு எப்படி அவரின் மகன் மூலம் நிறைவேறுகின்றது என்பது அழகாகக் கூறப்பட்டுள்ளது. நரசிம்மபல்லவன், சிறுத்தொண்டர் என்கின்ற பரஞ்சோதி போன்ற வரலாற்றுப் பாத்திரங்கள் இக்கதையில் வருகின்றனர்.
இதெல்லாம் 1900 களில் வந்த கதை. லேட்டஸ்ட் எழுத்தாளர்களின் புத்தங்கள் என்று தேட ஆரம்பித்தால், எழுத்தாளரும், தற்போதய மதுரை எம்.பியுமான சு.வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவல் சிறந்த நாவலாக இருக்கும். வள்ளல் பாரி என்று சங்க இலக்கியத்தில் படித்துவந்த பறம்பு மலை ஆண்ட வேளிர் குல மன்னன் பற்றிய கதை தான் இது. அவனது வீரம் குறித்தும் மூவேந்தர்களை எதிர்த்து செய்த வீரம் மிக்க போர் குறித்தும் பேசுகிறது. இதை படிக்கும் பொது நிச்சயம் அந்த காலகட்டத்திற்கு டைம் ட்ராவல் செய்த உணர்வு ஏற்படும்.
அவர் எழுதிய மற்றொரு சிறந்த நாவல் காவல்கோட்டம் . முகலாய அரசின் வீட்டை சிங்கம் மல்லிகை கஃபூர் தென்னிந்தியா படையெடுத்து வந்த போது, தெலுங்கு நாயக்கர்களும், கள்ளர்களும் எப்படி ஒருவருடன் ஒருவர் மோதி சமரசம் செய்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. வசந்தபாலன் இயக்கத்தில் 2012-ஆம் ஆண்டில் வெளிவந்த அரவான் திரைப்படம் இப்புதினத்தை அடிப்படைக் கதையாகக் கொண்டது