பெண்கள் வழிநடத்தும் குடும்பம் பொருளாதார பிரச்சனை இன்றி செழிப்புடன் வாழ முடியும் என்பது தான் நிதர்சன உண்மை. ஆம் பல ஆண்டுகளாக ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்குப் பெண் தொழில் முனைவோர்களின் பங்களிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆண்களுக்கு நிகராக பெண்களும் பல துறைகளில் சாதித்துக் காட்டுவதோடு பெண் தொழில் முனைவோர்களாகவும் வளர்ந்து வருகின்றனர். இத்தகைய பெண்களை பெருமைப்படுத்தும் விதமாகவே ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி பெண் தொழில் முனைவோர் தினம் கொண்டாடப்படுகிறது. நீங்கள் பெண் தொழில் முனைவோர்களாக இருந்தால் இதுவரை உங்களது துறையில் பெற்று வரும் வெற்றியைத் தொடர்ந்து பெறுவதற்கு இந்தஐடியாக்களை நீங்கள் பின்பற்றுங்கள் என்கின்றனர் வல்லுநர்கள்.
கருத்துகளைப் பகிர்வது மற்றும் போட்டியாளர்களை ஆராய்வது:
பொதுவாக எந்த வியாபாரம் செய்தாலும், வெற்றியைப் பெறுவதற்கு தொழில் வல்லுனர்களிடமிருந்து கருத்துக்களைப் பெறுவது அவசியம். இது உங்களது வணிகத்தில் குறைபாடுகளை மட்டுமில்லை, நீங்கள் செய்யும் வேலை சரியாக உள்ளதா? என்பதையும் நீங்கள் ஆராய்ந்து கொள்வதற்கு உதவியாக உள்ளது. எனவே எவ்வித தயக்கமும் இன்றி தொழில் வல்லுனர்களிடம் சில கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இது தவறு செய்கிறீர்கள் என்று சொன்னாலும் கவலைக்கொள்ள வேண்டாம். இது வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உதவியாக இருக்கும். இதோடு உங்களது வியாபாரத்தில் உள்ள போட்டியாளர்கள் என்ன செய்கிறார்கள்? என்பது குறித்து ஆராய்வது அவசியமான ஒன்று.
நெட்வொர்க் உருவாக்கிக் கொள்ளுதல் : வியாபாரம் என்பது தனியாகச் செய்யக்கூடியது இல்லை. பிறரின் ஒத்துழைப்பு மற்றும் உதவி மிகவும் அவசியமான ஒன்று. எனவே உங்களது வியாபாரத்திற்கு ஏற்ற சிறந்த நெட்வொர்கிங்கை உருவாக்கிக் கொள்ளவும். இதன் மூலம் உங்களுக்கு தொழிலுக்குத் தேவையான வழிகாட்டுதல் மற்றும் பொறுப்புணர்வு இரண்டையும் பெறுவதற்கு உதவியாக இருக்கும். குறிப்பாக நீங்கள் எதுவும் பிரச்சனையில் மற்றும் வியாபார நஷ்டத்தில் இருந்தால், நீங்கள் உருவாக்கும் நெட்வொர்க் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இலக்குகளை நிர்ணயித்தல் : எந்தவொரு விஷயங்களை நீங்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாலும் இலக்குகளை நீங்கள் நிர்ணயம் செய்திருக்க வேண்டும். குறிப்பாக தொழில் முனைவோர்கள் இலக்குகளை நிர்ணயித்துப்பயணிக்க வேண்டும். நீங்கள் ஆரம்பித்துள்ள நிறுவனம் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்றும், அடுத்த 10 ஆண்டுகளில் நீங்கள் எதைச் சாதிக்க திட்டமிட்டுள்ளீர்கள்? இதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இலக்காக கொள்ள வேண்டும்.
நெகிழ்வான சூழலை உருவாக்குதல் : வேலை பார்க்கும் பெண்களுக்கே குடும்பத்தில் அதிகளவில் நேரத்தை செலவிட முடியாத சூழல் உள்ளது. பெண் தொழில் முனைவோர்களாக இருந்தால் சொல்லவே தேவையில்லை. எப்படி தொழில் முன்னேற்றம் காண்பதற்காக நேரம் பார்க்காமல் உழைக்க வேண்டும். இதனால் குடும்பத்தைக் கவனிக்க முடியாது. இதனால் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய செயல் தொழில் முன்னேற்றத்தையும் பாதிக்கும். எனவே உங்கள் வேலைக்கும் மற்றும் இல்லற வாழ்க்கைக்கும் இடையே சரியான சமநிலையை வைத்திருப்பது உங்களது வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். இதோடு மன நிம்மதியும் உங்களுக்கு கொடுக்கும்.
புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளுதல் : கற்றல் என்பது கடல் மாதிரி. ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்கள் உலகிற்கு அறிமுகமாவதால் கற்றுக்கொள்வது முக்கியமானது. அதிலும் தொழில் முனைவோர்கள் புதுப்புது அப்டேட்களை அறிந்து கொள்ள வேண்டும். இது உங்களது வியாபாரத்தை வளர்ப்பதோடு புதிய மற்றும் தனித்துவமான வழிகளை நீங்கள் பெற முடியும்.