ஏசி வாங்குவது மட்டுமல்ல, அதை பராமரித்து இயக்குவது செலவு கூடுதலான விஷயம் தான். ஏனென்றால் வீட்டில் இருக்கும் எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களிலேயே மிக அதிகப்படியான மின்சாரத்தை உறிஞ்சுவது இந்த ஏசி-தான். இதனால், கோடை காலம் முழுவதுமே நமது மின்சாரக் கட்டணம் மிகக் கூடுதலாகத் தான் இருக்கும். இருப்பினும், பயனுள்ள சில டிப்ஸ்களை நாம் கடைப்பிடித்தோம் என்றால், மின்சார கட்டணத்தை பெருமளவிற்கு நாம் கட்டுப்படுத்த முடியும்.
வாடிக்கையாக சர்வீஸ் செய்வது முக்கியம் : ஏசியில் நல்ல கூலிங் கிடைக்கவும், அதே சமயம் மின்சார கட்டணம் உயராமல் இருக்கவும் சிறந்த வழி, அவ்வபோது ஏசியை சர்வீஸ் செய்து வைத்துக் கொள்வது தான். ஒவ்வொரு ஆண்டும் கோடை காலம் தொடங்கும் போது உங்கள் ஏசியை சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும். அதே சமயம், தேவைப்படும் சூழல்களிலும் சர்வீஸ் செய்வது அவசியம். சர்வீஸ் செய்யும்போது ஏசியில் உள்ள காயில்கள் சுத்தம் செய்யப்படும். கூலண்ட் செயல்பாடு பரிசோதிக்கப்படும். இதனால், புத்தம் புதுசு போல ஏசி செயல்பட தொடங்கும்.
லீக் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் : ஏசி பயன்படுத்தும்போது அடிக்கடி ஏற்படும் பிரச்சனை இதுதான். ஏசி மற்றும் ஜன்னல் பிரேம்களுக்கு இடையே சில இடைவெளி இருப்பதன் காரணமாக கூலிங் திறனை அது பாதிக்கிறது. அதே சமயம், எம்-சீல் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி இடைவெளியை பயனாளர்கள் அடைத்துக் கொள்ள முடியும்.
கட்-ஆஃப் டெம்ப்பரேச்சர் முக்கியம் : நீங்கள் இருக்கும் அறையில் குறிப்பிட்ட அளவு கூலிங் கிடைத்தவுடன் ஏசி தானாகவே ஆப் ஆகும்படி செட் செய்து கொள்வதுதான் கட்-ஆஃப் டெம்ப்பரேச்சர் ஆகும். உதாரணத்திற்கு 24 டிகிரியில் நீங்கள் கட்-ஆஃப் டெம்ப்பரேச்சர் செட் செய்திருக்கிறீர்கள் என்றால், அறையில் அந்த அளவுக்கு கூலிங் கிடைத்தவுடன் கம்ப்ரெஸ்ஸர் தானாகவே ஆஃப் ஆகிவிடும்.
ஏர் பில்டர்களை கிளீன் செய்ய வேண்டும் : உங்கள் ஏசியில் உள்ள ஏர் பில்டர்களில் அளவுக்கு அதிகமாக தூசி படிந்திருக்கக் கூடும். இதனால் உங்களுக்கு அதிக கூலிங் கிடைக்காது. இதனால், நீங்கள் டெம்ப்பரேச்சரை இன்னும் குறைக்க நேரிடும். அதன் எதிரொலியாக மின்சார கட்டணம் உயரும். ஆகவே, ஏர் பில்டர்களில் உள்ள தூசியை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும்.