மாத ஊதியம் வாங்குபவர்களுக்கு இருக்கின்ற முக்கிய பிரச்சனை பட்ஜெட்டை சமாளிப்பது. அதிலும் வீட்டைவிட்டு பேச்சிலரா ரூம் எடுத்து இருக்கிறவர்களுக்குக் கண்டிப்பாக அது பெரிய காரியமாகவே இருக்கிறது. மாத இறுதியில் கையில் காசு இல்லாமல் வெளியே கடன் வாங்குகின்ற அளவிற்குக் கூட பேச்சிலர்கள் செலவு செய்வது உண்டு.
முதலில் மாத சம்பளம் வாங்கும் பேச்சிலர்கள், சம்பளம் எவ்வளவு என்பதை எழுதிக்கொள்ளுங்கள். அதில் முக்கிய தேவைகளுக்கான தொகையை வரிசைப்படுத்திக் கழித்துக்கொள்ளுங்கள். உதாரணத்திற்குத் தங்கும் இடத்தின் வாடகை, உணவு, போன் ரிசார்ஜ், பெட்ரோல் செலவு, போக்குவரத்து செலவு மற்றும் மருத்துவச் செலவு போன்றவற்றை முதலில் முன்னுரிமை கொடுத்துக் கழித்துக்கொள்ளுங்கள். மீதம் உள்ள பணத்தில் உங்களுக்கான செலவு பணம் என்று ஒரு தொகையை எடுத்துக்கொள்ளுங்கள்.
எளிமையான முறையில் குறைந்த பணம் கொண்டு சேமிக்கும் திட்டம் என்றால் அது தபால் துறை மாதாந்திர சேமிப்பு திட்டம். உங்கள் அருகில் உள்ள தபால் நிலையத்தில் ஒரு சேமிப்பு கணக்கைத் தொடங்கி அதில் குறைந்தபட்சம் ரூ.200 முதல் செலுத்திச் சேமிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, மருத்துவ காப்பீட்டில் பணம் முதலீடு செய்வதும் எதிர்காலத்திற்கு நல்லது தான்.
மேலும் தனியாக இருப்பவர்கள் கண்டிப்பாக உணவு மற்றும் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியம் என்பது நாம் தினமும் சாப்பிடும் உணவு முறையில் இருந்து கிடைக்கிறது. அப்படி இருக்க அலுவலக வேலை, சோர்வு என்று உணவைத் தள்ளிப்போடுவதும், சரியான உணவை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதும் தவறு தான். வெளியில் தினமும் உடலுக்கு கேடான உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இதுவும் உடலுக்கு நாம் போடும் பட்ஜெட் தான்.
கணக்கு தெரியாமல் செலவு செய்வதைத் தவிர்க்க, தினமும் செய்யும் செலவுகளைக் கணக்கில் வைத்து கொள்வது பேச்சிலர்களாக இருப்பவர்களுக்கு நல்லது. சினிமாவுக்கு சென்றால், வெளியூர்களுக்குச் சென்றால் அந்த செலவை மாத சம்பளத்தில் கணக்குப் போடவும். மாத சம்பளத்தில் கண்டிப்பாக 20 % பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற முடிவை எடுங்கள். உதாரணத்திற்கு ரூ.25,000 வரை சம்பளம் வாங்குகிறவர்கள் என்றால் அதில் குறைந்தபட்சம் 2000 - 5000 வரை சேமிக்கவும்.