நம் வாழ்வியலுக்கு உதவக் கூடிய கலைகள் பல இருக்கின்றன. உதாரணத்திற்கு நீச்சல் பயிற்சி, கார் ஓட்டுநர் பயிற்சி, மனநலனை மேம்படுத்தக் கூடிய ஓவியப் பயிற்சி, இசைப் பயிற்சி, கராத்தே, யோகா என நிறைய கலைகளை குறிப்பிடலாம். அதேபோல, நமக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி தரக் கூடிய எலெக்ட்ரீசியன், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக் என பலவிதமான திறன்கள் இருக்கின்றன.
பலவற்றில் கவனம் கூடாது : பிரத்யேகமான பயிற்சி ஒன்றை நீங்கள் கற்றுக் கொள்ள விரும்பும்போது, அதில் மட்டுமே நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். ஒரே சமயத்தில் பல கலைகளை அல்லது திறன்களை கற்றுக் கொண்டு விடலாம் என்று நீங்கள் மனப்பால் குடித்தால் அது எந்தப் பலனையும் தராது. குறிப்பாக பல வித கட்டளைகளைக் கண்டு உங்கள் மூளை குழப்பம் அடையலாம். ஆகவே, ஒரே விஷயத்தில் கவனம் செலுத்துங்கள்.
வழிகாட்டிகள் தேவை :தியானம், நீச்சல், யோகா போன்ற பல கலைகள் எளிமையானதாக தோன்றும். யாருடைய உதவியும் இன்றி நாமே கூகுளில் தேடிப் பிடித்து வழிகாட்டுதல்களை படித்து கற்றுக் கொள்ளலாம் என தோன்றும். ஆனால், வழிகாட்டி ஒருவரின் பயனுள்ள ஆலோசனைக்கு வேறு எதுவுமே ஈடாகாது. மேலும், உங்களுடைய உடல் தோற்றம் மற்றும் ஆர்வம், அறிவுத்திறன் ஆகியவற்றை கணித்து அவர்கள்தான் சரியான ஆலோசனைகளை வழங்க முடியும்.
இடைவெளி தேவை : விடாமுயற்சி வெற்றி தரும் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். அதற்கு அர்த்தம் ஓய்வின்றி உழைப்பது என்று கிடையாது. கல்வி பயிற்சியாக இருக்கலாம் அல்லது உடல் சார் பயிற்சியாக இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அவ்வபோது இடைவெளி விடுவதுதான் உங்கள் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சி அளிப்பதாக அமையும்.
கற்ற பயிற்சியை தொடருவது : ஒருமுறை நீங்கள் வெற்றிகரமாக கார் ஓட்டிவிட்டதாக வைத்துக் கொள்வோம். அத்தோடு விட்டுவிட்டால் நீங்கள் முழுமையாக கற்றுக் கொண்டு விட்டதாக அர்த்தம் ஆகாது. எதையும் மீண்டும், மீண்டும் பயிற்சி செய்கின்றபோதுதான் நமக்கு அது கை கொடுக்கும். இல்லையென்றால் நாளடைவில் அந்த திறன் தொடர்பான அடிப்படைகள் கூட நமக்கு மறந்து போகும்.