இன்றைய நிலையில் வேலை பார்க்கும் அனைவருக்கும் உள்ள மிக முக்கிய பிரச்சனை இதுதான். தங்களுடைய தனிப்பட்ட வாழ்விற்கும் அலுவலகம் மற்றும் வேலை நேரத்திற்கும் இடைப்பட்ட நேரத்தை (work - life balance) சமநிலையில் பராமரிக்க முடியாமல் அதிக அளவு வேலை பளுவினால் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதனால் மன அழுத்தம் அதிகரிப்பதோடு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவதோடு, சுற்றியுள்ளவர்களிடம் உள்ள உறவிலும் பல்வேறு விரிசல்கள் ஏற்படுகின்றன.
இந்த வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை சமநிலையை ஒருவர் சரியாக பராமரிக்கவில்லை எனில், இதனால் அவருக்கு பல விதத்திலும் பிரச்சினைகள் உண்டாகக்கூடும். கஷ்டப்பட்டு வேலை பார்ப்பதே சந்தோஷமாக இருப்பதற்கு தானே. கடினமாக வேலை பார்த்தும் தனிப்பட்ட வாழ்வில் சந்தோஷம் இல்லை எனில் எதற்காக வேலை பார்க்க வேண்டும் என்றும் பலர் தங்களது மனதிற்குள்ளேயே குமுறி கொண்டு இருக்கின்றனர். உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருந்தாலும் கிடைக்கும் சில இடைவேளைகளில் உங்களது மன அழுத்தத்தை குறைக்கும் வகையாக செயல்களை செய்ய வேண்டும்.
எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள்: தனிப்பட்ட வாழ்வோ அல்லது வேலையோ இரண்டிற்கும் ஒரு குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். இந்த நேரம் வரை வேலை செய்ய வேண்டும், இந்த நேரம் வரை தனிப்பட்ட வாழ்க்கையிலும் அல்லது குடும்பத்தாருடன் செலவிட வேண்டும் என்பது போன்று கட்டுப்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும்.