உரிமையாளர்கள் தங்கள் செல்ல நாய்களுக்கு தேவையான அரவணைப்பு மற்றும் கவனம் கொடுக்கும் அதே நேரம், அவற்றை மகிழ்ச்சியாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்கக்கூடிய பொறுப்புகளில் தினசரி அடிப்படையில் விழிப்புடன் இருப்பதும் முக்கியம். வீட்டில் செல்லபிராணியாக நாய் வளர்ப்பது என்பது கிட்டத்தட்ட ஒரு குழந்தையை பராமரிப்பதற்கு சமம்.
மனிதர்களை போலவே செல்லப்பிராணிகளுக்கும் வயதாகும். வயது மூப்பின் காரணமாக அவற்றுக்கும் சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூட்டுகள் தொடர்பான சில உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட கூடும். உங்களது வீட்டில் நாய் வளர்க்கிறீர்கள் என்றால் அதன் வயதின் அடிப்படையில் அதற்கு உடலில் ஏதேனும் சிக்கல் இருக்கிறதா, அறிகுறிகள் தெரிகிறதா என்று கவனிக்க வேண்டியது அவசியம். இது உங்கள் செல்ல நாய்க்கு தீவிர நோய்கள் உள்ளிட்ட பிற மருத்துவ சிக்கல் ஏற்படுவதை தவிர்க்க உதவும். உங்கள் நாய்க்கு சற்று வயதாகிவிட்டால் நீங்கள் கண்கானிக்க வேண்டிய அறிகுறிகள் சிலவற்றின் பட்டியல் இங்கே.
சிறுநீரக பிரச்சனைகள்: பொதுவாக ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் நாய்களுக்கு சிறுநீரக செயல்பாட்டில் சிக்கல்கள் உருவாக்க தொடங்குகின்றன. இதன் காரணமாக நாய்கள் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்கும் மற்றும் அதன் மேல் உள்ள முடி அதிகமாக உதிர கூடும். இது போன்ற அறிகுறிகளை உங்கள் நாயிடம் நீங்கள் கண்டால், உடனடியாக கால்நடை மருத்துவரை சந்தித்து நாய்க்கு சிறுநீரக செயல்பாடு பரிசோதனை செய்யவும்.
இதய பிரச்சனைகள்: மனிதர்களை போலவே நாய்களுக்கும் வயதாகும் போது அவற்றின் இதயம் பலவீனமடைகிறது. வயதாவதால் ஏற்படும் இதய பலவீனம் காரணமாக வாக்கிங் செல்லும் போது அல்லது உடற்பயிற்சி செய்யும் போது கடும் சிரமத்தை எதிர்கொள்கின்றன. தவிர எளிதில் சோர்வடைவது, அதிகம் மூச்சிரைப்பது உள்ளிட்ட அறிகுறிகளும் நாயிடம் வெளிப்படுகின்றன. இது தவிர நாய்கள் தொடர் இருமலால் பாதிக்கப்படலாம். இதனால் அவற்றுக்கு சளி பாதிப்புகள் ஏற்படலாம். உங்கள் நாயிடம் மேற்கூறிய அறிகுறிகளை நீங்கள் கண்டால் கால்நடை மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்.
கல்லீரல் பிரச்னைகள்: நாய்களில் மிகவும் சுறுசுறுப்பான உறுப்புகளில் ஒன்றாக இருக்கிறது கல்லீரல். உடலில் தேங்கும் அனைத்து நச்சுக்களும் சிறுநீரகங்களால் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, ப்ராசஸிங் மற்றும் கன்வெர்ட்டிங் செய்வதற்கு அவற்றின் கல்லீரல் பொறுப்பாகும். இருப்பினும் கல்லீரலில் பிரச்சினைகள் ஏற்பட்டால் உங்கள் நாய் வயிற்றில் சில தொந்தரவுகளை அனுபவிக்க கூடும். தவிர அடிக்கடி வயிற்று உபாதைகள், மலச்சிக்கல், வாந்தி, வயிறு வீக்கம், வயிற்று போக்கு அல்லது துர்நாற்றம் வீசும் மலம் உள்ளிட்ட அறிகுறிகளால் அவை பாதிக்கப்படலாம். இந்த அறிகுறிகளை பார்த்தால் உடனடியாக அவற்றை மருத்துவரிடம் கூட்டி செல்லுங்கள்.
மூட்டு பிரச்சனைகள்: நாய்களுக்கு வயதாகும் போது அவற்றின் கால்களில் மூட்டுப் பிரச்சினைகள் உருவாக கூடும். இதனால் வாக்கிங், ரன்னிங் செல்லும் போது அல்லது சில சமயங்களில் உட்காரும் போது கூட சிரமத்தை எதிர்கொள்கின்றன. குறிப்பாக குளிர்காலத்தில் இந்த சிக்கல்களை நாய்கள் அடிக்கடி எதிர்கொள்கின்றன. இது போன்ற அறிகுறிகளை கவனித்தால் கால்நடை மருத்துவரிடம் கூட்டி செல்லுங்கள். அவர் உங்கள் நாய்க்கு எக்ஸ்ரே எடுக்க பரிந்துரைக்கலாம்.