நம் அனைவருக்குமே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று ஆசை இருப்பதுண்டு. ஆனால் நடைமுறையில் அது சாத்தியமா என்றால் கண்டிப்பாக ஒருவருக்கு கூட சாத்தியமாவதற்கு வாய்ப்புகள் இல்லை. தினசரி ஏதேனும் பிரச்சனைகள் சிக்கிக் கொண்டு அதிலிருந்து விடுபட்டு வருவதற்குள் மீண்டும் புதிய பிரச்சனை ஏற்பட்டு மன அழுத்தத்தை உண்டாக்கும். எனவே இது போன்ற சங்கடங்களில் இருந்து விடுபட்டு எப்போதும் நம்மை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதற்கான சில வழிமுறைகளை பற்றி பார்ப்போம்
உங்களுக்குப் பிடிக்காத விஷயங்களுக்கு நோ சொல்லுங்கள் : சில நேரங்களில் உங்களுக்கு பிடித்த ஒருவரோ அல்லது உங்களுக்கு கட்டளையிடும் அதிகாரத்தில் உள்ள ஒருவரோ கூட உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயத்தை செய்ய சொல்லி கேட்கலாம். அந்த விஷயம் செய்ய உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உடனடியாக அவரிடம் மறுப்பு தெரிவிப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் பிடிக்காத ஒரு வேலையை செய்வதன் மூலமே உங்களது மன அழுத்தம் அதிகரித்து தேவையில்லாத மனக்கவலைகளை உண்டாக்கும்.
உங்கள் பொறுப்புகளை ஒப்படைத்து விடுங்கள் : நீங்கள் ஒருவரே அனைத்து வேலைகளையும் எடுத்து போட்டுக் கொண்டு செய்யும் நிலை ஏற்பட்டால் கண்டிப்பாக உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இது போன்ற சமயங்களில் முடிந்தால் முக்கியமான, உடனடியாக முடிக்க வேண்டிய வேலைகள் சிலவற்றை உடனடியாக முடித்து அவற்றை ஒப்படைத்து விடலாம், அல்லது உங்கள் பொறுப்புகளை தகுதியான நபர்களுக்கு பகிர்ந்தளிப்பதன் மூலம் உங்களின் மீது உள்ள சுமை குறைவதோடு வேலையும் எளிமையாகவும் விரைவாகவும் முடியும். இதனால் தேவையற்ற மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டு மனதளவில் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
உடற்பயிற்சி செய்யுங்கள் : உடற்பயிற்சி செய்வது என்பது அனைவருக்கும் தங்கள் மனதை திசை மாற்றக் உதவும் பழக்கமாக இருக்கும். யோகாசனம் செய்வது, உடற்பயிற்சி செய்வது, ஜும்பா நடனம் அல்லது சிறிது தூரம் நடைபயிற்சி செய்வது ஆகியவையே உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க போதுமானவை என்று கூறலாம். இதைத் தவிர இந்த பழக்கத்தின் மூலம் உங்கள் உடல் எடை குறைதல், மனதளவில் ரிலாக்ஸாக இருத்தல் போன்ற பல நன்மைகளும் கிடைக்கின்றன..
மன்னித்து விடுங்கள் : இது அனைவரிடமும் இருக்க வேண்டிய மிக மிக முக்கியமான ஒரு தன்மையாகும். உங்களுக்கு பிடிக்காதவரின் மீதோ அல்லது உங்களுக்கு பிடிக்காத செயலை செய்து உங்களுக்கு பிரியமான ஒருவரின் மீது கூட உங்களுக்கு அதிகமான கோபம் இருக்கலாம். ஆனால் நீண்ட நாட்களுக்கு அந்த கோபத்தை உங்களுக்குள்ளேயே வைத்துக் கொண்டிருப்பது உங்களுக்கு மன அழுத்தத்தை உண்டாக்கும். அதே சமயத்தில் கோபத்தை மற்றவர் மீது காட்டினால் இருவருக்குமே மன சங்கடம் உண்டாகலாம். எனவே மன்னிக்க கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவரை மனதார மன்னித்து விட்டால் உறவு பலப்படுவதோடு, மன அழுத்தவும் குறைந்து மகிழ்ச்சியாக இருக்க முடியும். மேலும் மனதளவில் நேர்மறையான எண்ணங்கள் அதிக அளவில் உருவாவதற்கும் நல்ல வாய்ப்பாக அமையும்.